உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆடிப்பெருக்கில் நீர்நிலைகளில் குவிந்த மக்கள்

ஆடிப்பெருக்கில் நீர்நிலைகளில் குவிந்த மக்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பதோடு, நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுவர். புதுமணத்தம்பதிகள் நீர் நிலைகளில், பெண்களுக்கு புதிய தாலி மாற்றி சுவாமி கும்பிடுவர்.நேற்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, பாரூர் அருகே உள்ள மஞ்சமேடு, மத்துார், தீர்த்தம், ஊத்தங்கரை அனுமன்தீர்த்தம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் புனித நீராடினர். கே.ஆர்.பி., அணை பகுதியில், செல்லியம்மன் மார்க்கண்டேயன் சுவாமி கோவில் முன்பு உள்ள பசு மாட்டு சிலையின் வாயில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடினர்.அணை பின்பகுதியிலுள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து, அணை பகுதிக்கு நகர் வலம் வந்த அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி கும்பிட்ட பொதுமக்கள் பின்னர் பூங்காவில் குவிந்து விளையாடி மகிழ்ந்தனர். அணை பின்பகுதியில் உள்ள கடைகளில் மீன் உணவுகளை சுவைத்தனர்.இதில், திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். 50க்கும் மேற்பட்ட போலீசாரும், 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே போல், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் குவிந்த மக்கள், அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.* ஊத்தங்கரை அடுத்த, அனுமன்தீர்த்தத்திலுள்ள தென்பெண்ணையாற்றில், புதுமண தம்பதிகள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். புதுமண தம்பதிகள், திருமணத்தின் போது அணிவித்த மாலைகளை ஆறுகளில் விட்டு, விட்டு தாலிக்கயிறுகளை மாற்றிக்கொள்வது வழக்கம். நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தென்பெண்ணையாற்றில் புனித நீராடி, ஆஞ்சநேயரை வழிபட்டனர்.* போச்சம்பள்ளி அடுத்த, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில், தர்மபுரி, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராட குவிந்தனர்.இவர்கள் அதிகாலை, 5:00 மணி முதலே குவிந்தனர். அதேபோல் மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில், குளிக்க இடமின்றி ஆங்காங்கே காத்துக்கிடந்து புனித நீராடி பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை