உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின் கட்டண உயர்வால் தொழில் பாதிப்பு கிரானைட் தொழில் சங்கத்தினர் மனு

மின் கட்டண உயர்வால் தொழில் பாதிப்பு கிரானைட் தொழில் சங்கத்தினர் மனு

கிருஷ்ணகிரி: வங்கி கடன் வட்டி விகிதம் உயர்வு, மின்கட்டண உயர்வால் கிரானைட் தொழில் பாதிக்கப்படுவதாக, கிருஷ்ணகிரி கிரானைட், சிறு குறு தொழில்சங்க தலைவர் மகேஷ் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், கனிமவளம் நிறைந்த மாவட்டம். இங்கு கிரானைட் மெருகூட்டும் சிறு குறு தொழிற்சாலைகள் மட்டும், 400க்கும் மேற்பட்டவை உள்ளன. எங்கள் தொழிலுக்கு, வங்கிகளில் கடன் வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியிலிருந்து, போலி பில்களுடன் லாரியில் செல்லும் கிரானைட் கற்களை யாரும் தடுப்பதில்லை. மாவட்டத்தில், 150க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்காமல், காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், பாலீஸ் போட ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து கிரானைட் கற்கள் வாங்குகிறோம். அதற்கும் ஜி.எஸ்.டி., வரி கட்டுகிறோம். மேலும், அதிக விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கிரானைட் கல் மற்றும் உள் மாவட்டங்களில் விற்கும் கிரானைட் கற்களுக்கு ஒரே மாதிரியான சீனியரேஜ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அண்டை மாநிலங்களில், இதுபோன்ற நிலை இல்லை. இக்காரணங்களால், கிரானைட் தொழிற்சாலைகளை முறையாக இயக்க முடியவில்லை. வருவாய் இல்லாத காரணத்தால், அக்., 2 (நாளை) முதல், தொழிற்சாலைகளின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த உள்ளோம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !