உபரிநீர் கால்வாய்க்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கோரி மனு
கிருஷ்ணகிரி; போச்சம்பள்ளி அருகே உபரிநீர் கால்வாய் வெட்ட நிலம் கொடுத்த விவசாயிகள், இழப்பீடு கோரி மனு அளித்துள்ளனர்.கே.ஆர்.பி., டேம் நீடிப்பு உபரிநீர் இடது கால்வாய் பயன்பெறுவோர் சங்க தலைவர் சிவகுரு தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாலேகுளி முதல் சந்துார் வரை, 28 ஏரிகளுக்கு, தென்பெண்ணையாற்று உபரிநீரை கொண்டு செல்லும் வகையில் கடந்த, 2012ல், புதிய கால்வாய் வெட்டப்பட்டது. இதற்காக, 4 பஞ்.,கள் மற்றும் நாகோஜனஹள்ளி டவுன் பஞ்.,க்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது.பணிகள் முடிந்து கால்வாய் பயன்பாட்டுக்கு வந்து, பல ஆண்டுகளாகியும் இழப்பீடு வழங்கவில்லை. வீரமலை, விளங்காமுடி, காட்டாகரம், வெப்பாலம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்ட நிலையில், நாகோஜனஹள்ளி டவுன் பஞ்.,க்கு உட்பட்ட பகுதியில், கால்வாய் வெட்ட நிலம் கொடுத்த, 228 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வரவில்லை. எனவே, இப்பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தினேஷ்குமார், உடனடியாக இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.