காவேரிப்பட்டணத்தில் சாலையோர வாரச்சந்தை கடைகள் அகற்றம்
கிருஷ்ணகிரி, நவ. 10-'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, காவேரிப்பட்டணத்தில் சாலையோரத்தில் வைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு, வாரச்சந்தை கூடத்தில், காய்கறி விற்பனை நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் கடந்த, 14 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட உழவர்சந்தை, செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னரே மூடப்பட்டது. வார சனிக்கிழமை நாட்களில் நடக்கும் வாரச்சந்தை, பாலக்கோடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவே நடத்தப்பட்டு வந்தது. இது குறித்த செய்தி, 'காலைக்கதிர்' நாளிதழில் கடந்த, 2ல் படத்துடன் செய்தி வெளியானது. நேற்று காவேரிப்பட்டணத்தில், பாலக்கோடு சாலையில் நடக்கும் வாரச்சந்தையை அதிகாரிகள் தடுத்தனர். மேலும் காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., அருகிலுள்ள விற்பனை கூடத்தில் காய்கறிகளை விற்ற அறிவுறுத்தினர். இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், 'சாலையோரம் வைக்கும் கடைகளில் வரி என்ற பெயரில் ஆளும்கட்சியினர், குறைந்தளவில் பணம் வசூலித்தனர். தற்போது விற்பனை கூடத்தில் விற்கப்படும் காய்கறிகளுக்கு, இரட்டிப்பு வாடகை கொடுக்க மிரட்டுகின்றனர். காய்கறிகள், பொருட்களை விற்க, தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களிடம் வாடகை என்ற பெயரில், 10 மடங்கு வசூல் நடத்துபவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.