வெங்கட்டரமண சுவாமி கோவிலில் ரூ.2.82 கோடியில் புனரமைப்பு பணி
கிருஷ்ணகிரி, கண்ணம்பள்ளி, வெங்கட்ட ரமண சுவாமி கோவிலில், 2.82 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகளை, தமிழக முதல்வர் காணொலியில் துவக்கி வைத்தார்.தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 218 கோடி ரூபாய் மதிப்பில், 26 கோவில்களில் புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலியில் நேற்று துவக்கி வைத்தார். அதன்படி கிருஷ்ணகிரி அடுத்த கண்ணம்பள்ளி வெங்கட்ட ரமண சுவாமி கோவிலில், 2.82 கோடி ரூபாய் மதிப்பிலான புனரமைப்பு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், ஹிந்து சமய அறநிலையத்துறை, கிருஷ்ணகிரி மண்டல உதவி கமிஷனர் ராமுவேல் தலைமை வகித்தனர்.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,'கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோவிலில், ராஜகோபுரம் கட்டுதல், முன் மண்டபம், கோவிந்தராஜ் சன்னிதி, ஆஞ்சநேய சன்னிதி புதுப்பிப்புக்கு, நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்த, 14 மாதங்களுக்குள் பணி முடிந்து, வரும், 2026 ஜூலையில், கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.நிகழ்ச்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி செயற்பொறியாளர் தேசிங்குராஜன், ஆய்வாளர்கள் சகவரசன், அண்ணாதுரை, சுமதி, கவிப்பிரியா, கோவில் செயல் அலுவலர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.