தொழில் முனைவோரை ஊக்குவிக்க கருத்தரங்கம்
ஓசூர், தமிழகம், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும் நோக்கத்தில், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.அதன்படி, ஓசூர், 2வது சிப்காட்டில் இயங்கும் திறன் மேம்பாட்டு மையத்தில், 'ஸ்மார்ட்' உற்பத்தி எளிமை படுத்தப்பட்டது - 1.0 என்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:உற்பத்தி துறையில், 8 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி வந்தேன். தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அனைத்து துறைகளிலும், எண்ணற்ற விஞ்ஞான வளர்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.இதனால் உற்பத்தி மிகவும் எளிமை படுத்தப்பட்டு, உலக அரங்கில் உற்பத்தி துறையில், நம் நாடு சிறந்து விளங்குகிறது. 2008ம் ஆண்டில் இருந்த, 3டி மாடலிங் தொழில் நுட்பங்கள், எந்த தனியார் நிறுவனமும் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு, 17 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து முன்னேறியுள்ளது.இதன் வாயிலாக, 3டி பிரிண்டிங் ஆய்வு மையம் அமைக்க எளிதாக வழிமுறைகள் கண்டறியப் பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பம் குறித்த அறிமுகங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு, ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறை யில் தொழில் முனைவோர்களுக்கு கிடைப்பதால், தொழில்துறை மேலும் வேகமாக வளர்ச்சி அடையும்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, 'நோ ரெக்ஸ்' எனப்படும், தொழில்துறை உற்பத்தி இயந்திர திறன் கண்டறியும் கருவியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் அறிமுகம் செய்தார்.