துார்வாராத சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம்
கிருஷ்ணகிரி, தர்மராஜா கோவில் சாலையிலுள்ள சாக்கடை கால்வாயை துார்வாராததால், கழிவுநீர் வெளியேறி கடும் துர்நாற்றம் வீசுகிறது.கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தர்மராஜா கோவில் சாலை வழியாக தினமும் ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இச்சாலை கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக சேதமான நிலையில், தற்போது புதிய தார்ச்சாலை அமைத்து வருகின்றனர். இப்பகுதியிலுள்ள சாக்கடை கால்வாய் துார்வாராதால், கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால் அப்பகுதில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி இச்சாலையில் உள்ள பாதாள சாக்கடை மேனுவலில் இருந்து கழிவுநீர் வெளியேறி வந்த நிலையில், தற்போது சாக்கடை கால்வாயிலில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இவ்வழியில் செல்லும் நகராட்சி ஊழியர்கள் இவற்றை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தர்மராஜா கோவில் சாலையில், சாக்கடை கால்வாயை உடனே துார்வாரி, கழிவுநீர் சீராக வெளியேற நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.