அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கிருஷ்ணகிரி, ஜூலை 24
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையில், கிருஷ்ணகிரியில், மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெற, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் மாதம், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இப்பள்ளியில் பாரம்பரிய கலைக்கான குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு, 350 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு நகர பேருந்தில் இலவச பேருந்து பயணச்சலுகை உண்டு.இப்பள்ளியில் சேர விரும்புவோர், உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், திருமலை நகர், ராமாபுரம், கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், 04343 234001, 95003 88896 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.