சந்தேக வாட்ஸாப் குழு மாணவரிடம் விசாரணை
பர்கூர்: மத்திய உளவுத்துறை கண்காணிப்பில் உள்ள 'வாட்ஸாப்' குழுவை பயன்படுத்திய மாணவரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், பண்டசீமனுாரைச் சேர்ந்த, 22 வயது மாணவர், சென்னை யில் தங்கி, தனியார் பொறியியல் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கிறார். உ.பி., மாநிலத்தில், மத்திய அரசின் உளவுத்துறை கண்காணிப்பில் உள்ள ஒரு வாட்ஸாப் குழுவில், இந்த மாணவரின் மொபைல்போன் எண் இணைக்கப்பட்டுள்ளது. அதில் வந்த தகவல்களுக்கு, மாணவரும் பதிலளித்து வந்ததாக தெரிகிறது. தமிழக டி.ஜி.பி., அலுவலக தகவலில், பர்கூர் போலீசார் நேற்று முன்தினம் மாணவர் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அதில், 'மர்ம நபர் ஒருவர், அந்த வாட்ஸாப் குழுவில் தன்னை இணைத்ததாக மாணவர் கூறினார். இதையடுத்து போலீசார், மாணவரை எச்சரித்து அங்கிருந்து சென்றனர்.