ஆடி அமாவாசையில் தர்ப்பணம்
கிருஷ்ணகிரி :ஆடி அமாவாசையான நேற்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மற்றும் காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி, கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இதே போல், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பசு மாடுகளுக்கு அகத்திக் கீரையை வழங்கி, வேண்டுதல் நிறைவேற்றினர்.* ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அனுமந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நேற்று அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர். தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களை வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.* போச்சம்பள்ளி அடுத்த, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில், முன்னோர்களின் ஆசி பெற மக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். இதில், 5,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இவர்கள் பித்ரு வழிபாடு செய்து பிண்டத்தை ஆற்றில் கரைத்து, புனித நீராடி, மேற்கு நோக்கி உள்ள தென்னீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.