திருச்செந்துார் முருகனுக்குமண்டல பூஜை நிறைவு விழா
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், கடந்த மாதம் திருச்செந்துார் முருகன் சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தினமும் பூஜை நடந்து வந்த நிலையில், நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி காலை, 10:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜை நடந்தன. பின்னர் முருகன் உற்சவருடன், பெண்கள் பால்குடம் எடுத்து, மகாராஜகடை சாலை மற்றும் மலையப்ப சீனிவாச பெருமாள் கோவில் வரை சென்று மீண்டும் கோவிலுக்கு திரும்பி, மூலவருக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதில் பக்தர்கள் அலகு குத்தி கொண்டு வேண்டுதல் நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிகள் குழுவினர், ஓம்சக்தி மன்றத்தினர் மற்றும் பருவதராஜகுல மக்கள் செய்திருந்தனர்.