மாங்கூழ் தொழிலதிபர்கள் ஏமாற்றியது போல் அரசும் மா விவசாயிகளை ஏமாற்ற கூடாது
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட, 'மா' விவசாயிகளின் கூட்டு நடவடிக்கை குழு செயலாளர் சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'மா' அறுவடை துவங்கிய போது நடந்த முத்தரப்பு கூட்டத்தில், ஒரு கிலோ மாங்காய்க்கு, 12 ரூபாய் விலை நிர்ணயம் செய்தனர். ஆனால், மாங்கூழ் தொழிற்சாலை அதிபர்கள், 5 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்தனர். ஆந்திராவில், மாங்கூழ் தொழிற்சாலை நிறுவனம், 8 ரூபாய், அரசு மானியம், 4 ரூபாய் என மொத்தம், 12 ரூபாய் கொடுத்தனர். ஆனால் தமிழக அரசு, இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்தது.கடந்த, 2024ல் கடும் வெப்பத்தால் மாவட்டம் முழுவதும், 'மா' மகசூல் கடுமையாக பாதித்தது. இந்தாண்டு, 'மா' நல்ல விளைச்சல் இருந்தும் அறுவடை கூலி கூட கிடைக்கவில்லை. இதனால், கடந்த, 2 ஆண்டுகளாக, 'மா' விவசாயிகள் முற்றிலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். சந்தை மதிப்பு இழப்பீடு செய்யும் திட்டத்தில், 2.50 லட்சம் டன் மாங்காய்க்கு, 91 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். ஆனால், அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, எங்களுக்கு இதுவரை தெரியவில்லை. கடந்தாண்டு தமிழக அரசு அறிவித்த, 'மா' இழப்பீடு, இதுவரை வழங்காத நிலையில், இந்தாண்டும் அமைச்சர் அறிவித்துள்ளது வெறும் கண் துடைப்பா என்பதாகவே உள்ளது. மாங்கூழ் தொழிலதிபர்கள் ஏமாற்றியது போல், தமிழக அரசும், 'மா' விவசாயிகளை ஏமாற்றக் கூடாது. கடந்த, 2 ஆண்டுகளாக, 'மா' விவசாயிகளுக்கு அறிவித்துள்ள இழப்பீட்டை உடனே வழங்க, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.