உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ராஜாஜி பிறந்த பஞ்.,ல் அடிப்படை வசதி இல்லை கிராம மக்களை கண்டுகொள்ளாத பி.டி.ஓ.,க்கள்

ராஜாஜி பிறந்த பஞ்.,ல் அடிப்படை வசதி இல்லை கிராம மக்களை கண்டுகொள்ளாத பி.டி.ஓ.,க்கள்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், தொரப்பள்ளி கிராமம், மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி பிறந்த பகுதி. இந்த பஞ்., உட்பட்ட குமுதேப்பள்ளியில் தொழிற்சாலைகள் உள்ளதால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் தங்கியுள்ளனர். இப்பகுதியில் குப்பை தொட்டி இல்லாததால், சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதில், குடியிருப்பு குப்பைகள் மட்டுமின்றி, ஓட்டல் கழிவுகளும் உள்ளன. இவை பல நாட்களாக அள்ளப்படாமல் உள்ளதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.மேலும், தற்போது பெய்துள்ள மழையால், குமுதேப்பள்ளியில் உள்ள சாலை மிகவும் குண்டும், குழியுமாக மாறி, மழைநீர் தேங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, குமுதேப்பள்ளியிலிருந்து திப்பாளம் செல்லும் சாலையில், கெலவரப்பள்ளி அணை கால்வாய் செல்லும் பகுதியில், சாலையில் அரிப்பு ஏற்பட்டு அபாய பள்ளம் உருவாகியுள்ளது.அப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர், நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர். அதேபோல், குமுதேப்பள்ளி விக்னேஷ் நகர் உட்பட பல பகுதிகளில், மண் சாலை அரிப்பு ஏற்பட்டு மோசமாகி உள்ளது. இதையெல்லாம் பஞ்., நிர்வாகமோ அல்லது ஓசூர் ஒன்றிய அலுவலக பி.டி.ஓ.,க்களோ கண்டுகொள்ளவில்லை. நேரில் ஆய்வு செய்ய கூட வரவில்லை என, மக்கள் புலம்பி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை