ரூ.5 லட்சம் செலுத்தினால் ரூ.1 கோடி கடன் ஆசை காட்டி மோசடி செய்த இருவர் கைது
கிருஷ்ணகிரி, ஓசூர் அருகே விவசாயியிடம், ஒரு கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக ஆசை காட்டி, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, ஜூஜூவாடியை சேர்ந்தவர், 57 வயது விவசாயி. அவரது சமூக வலைதளத்தில் கடந்த, ஏப்., 2வது வாரத்தில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில், ஒரு கோடி ரூபாய் விவசாய கடன் பெறலாம் என இருந்துள்ளது. அதை நம்பி, அதிலுள்ள மொபைல் எண்ணை விவசாயி தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசியவர், ஒரு வங்கி விபரத்தை கூறி, அதில், 5 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். ஜி.எஸ்.டி., மற்றும் நடைமுறை செலவுகளுக்காக அதை பிரித்து அனுப்பினால் உங்களுக்கு, ஒரு கோடி ரூபாய் விவசாய கடன் கிடைக்கும் என, கூறியுள்ளார்.அதை நம்பிய விவசாயி, 5 லட்சம் ரூபாயை, போனில் பேசியவர் கூறிய வங்கி கணக்கிற்கு, அனுப்பினார். அதன்பின் அந்த மொபைல் எண் மற்றும் சமூகவலைதள பக்க விளம்பரம் செயல்படவில்லை. விவசாயிக்கும் எந்த பணமும் வரவில்லை. இது குறித்து கடந்த மே, 2வது வாரத்தில், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.விசாரணையில், பணம் அனுப்பப்பட்ட வங்கி எண், ஆந்திர மாநிலம், சித்துாரை சேர்ந்த சிவசங்கர், 39 என்பவருடையது என தெரிந்தது. அங்கு சென்ற கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார், அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர், வங்கி கணக்கிற்கு வரும், 5 லட்சம் ரூபாயை எடுத்து தந்தால், 20,000 ரூபாய் கமிஷன் தருவதாக, அதே பகுதியை சேர்ந்த சுனில்குமார், 50, என்பவர் கூறியதாக தெரிவித்தார். அதன்படி, சுனில்குமாரை போலீசார் கைது செய்தபோது அவர், தனக்கு, 40,000 ரூபாய் கமிஷனாக தரப்பட்டது எனவும், வங்கியிலிருந்து, 4.40 லட்சம் ரூபாயை வாங்கிச் சென்ற மர்மநபர் குறித்து, தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார். சுனில்குமார் கூறிய அடையாளங்களை வைத்து, கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தலைமறைவாக உள்ள, அந்த நபரை தேடி வருகின்றனர்.