உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2,000 புதிய கட்டடங்களுக்கு வரி விதிக்க அனுமதி கிடைக்குமா? ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு

2,000 புதிய கட்டடங்களுக்கு வரி விதிக்க அனுமதி கிடைக்குமா? ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், 2,000 புதிய கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்க தயாராக உள்ள நிலையில், அதற்கு அனுமதி வழங்கினால் மாநகராட்சிக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியிலுள்ள, 45 வார்டுகளில், 95,000 கட்டடங்களுக்கு சொத்து வரி மூலம் ஆண்டுக்கு, 130 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைக்கிறது. சிப்காட்டிலுள்ள தொழிற்சாலைகளுக்கு, குடியிருப்புக்கான வரி விதித்திருந்ததால், மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த ஆக., மாதம் ஓசூர் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற ஸ்ரீகாந்த், அதை கண்டறிந்து, சிப்காட்டை தொழிற்சாலை பகுதியாக மாற்றி, தொழிற்சாலை களிடம் இருந்து நிலுவையுடன் சொத்து வரியை வசூல் செய்ய நடவடிக்கை எடுத்தார். இதனால், மாநகராட்சிக்கு, 50 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வரி வருவாய் உயர்ந்தது. அதேபோல், அனுமேப்பள்ளி அக்ரஹாரத்தில் கடந்த, 14 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் இருந்த, 100 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் 45 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் என கிட்டத்தட்ட, 2,000 க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு புதிய சொத்து வரி விதிக்க, அவர் பட்டியல் தயார் செய்தார். அதற்கு ஒரு மாதத்திற்குள் அப்ரூவல் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை.இந்நிலையில், கமிஷனர் ஸ்ரீகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப் பட்டுள்ளதால், இன்னும் அப்ரூவல் கொடுக்கப்படாமல் உள்ளது. அதற்கு அனுமதி கொடுத்தால், மாநகராட்சிக்கு, 100 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனிடையே, ஓசூர் மாநகராட்சி பொறுப்பு கமிஷனராக, சேலம் மாநகராட்சி துணை கமிஷனர் பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். அவர், 2,000 கட்டடங்களுக்கு புதிய சொத்து வரி விதிப்பதற்கான அப்ரூவலை கொடுத்து, அதற்கான நடவடிக்கையை துவங்கினால், மாநகராட்சி வருவாய் அதிகரிக்கும். ஓசூர், அனுமேப்பள்ளி அக்ரஹாரத்தில் சொத்து வரி செலுத்தாத, 300 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், கமிஷனர் ஸ்ரீகாந்த் கண்டறிந்தார்.இதில், 100 தொழிற்சாலைகள் விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து சொத்து வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மீதமுள்ளவற்றின் விபரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து சொத்து வரி விதிப்பை தீவிர படுத்தினால், மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ