அக்டோபர் முதல் 24 மணி நேரமும் இயங்கும் மதுரை விமான நிலையம் விமான நிறுவனங்களுக்கு அழைப்பு
மதுரை:இந்திய விமான நிலையங்கள் ஆணையத் தலைவர் சுரேஷ், செப்., 1ல் மதுரை வந்த போது, மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நிர்வாகிகள் சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்தனர். அதன் அடிப்படையில் 24 மணி நேர சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சங்க தலைவர் ரத்தினவேலு கூறியதாவது:ஆணையத்தலைவர் சுரேஷ் உறுதி அளித்தபடி மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமானங்களுக்கான இரவு நேர ஒதுக்கீட்டு பட்டியல் கேட்டு, இந்திய விமான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள, 'இண்டிகோ, ஆகாசா ஏர், ஏர் இந்தியா' விமான நிறுவனங்களிடம் இரவு நேர ஒதுக்கீடு கேட்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் மதுரையில் இருந்து அதிகாலை 12:00 மணிக்கு மலேசியா கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவை கிடைக்கும். தற்போது மதுரையில் இருந்து சிங்கப்பூர், துபாய், இலங்கைக்கு இந்திய விமானங்கள் தான் சென்று வருகின்றன. இலங்கைக்கு அந்த காலத்திலேயே பாஷா எனப்படும் இருநாட்டு விமான சேவை ஒப்பந்தம் பெறப்பட்டதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேரடி விமான சேவை கிடைத்துள்ளது. இதேபோல மற்ற விமான நிறுவனங்களுக்கும் நேர ஒதுக்கீடு கேட்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறைய நாடுகளுக்கு விமான சேவை வழங்குகிறது. எனவே மதுரையை மையப்படுத்தி விமான சேவை மண்டலத்தை உருவாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம்.மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், சார்ஜா, குவைத், அபுதாபி செல்வதற்கு பாஷா ஒப்பந்தத்தை சேர்க்க வேண்டும். இந்த கோரிக்கையை மத்திய அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.