மதுரை : ''இந்தியாவில் பழம், பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை பதப்படுத்தாததால் 60 சதவீதம் வரை வீணாகிறது,'' என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் இந்திய பேக்கேஜ் மைய இயக்குனர் என்.சி.சாகா தெரிவித்தார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உணவு பொருட்களை பதப்படுத்துவதால் உணவு பஞ்சம், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும். உணவு பொருட்களுக்கான முறையான பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாததால் 60 சதவீதம் வரை வீணாகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் ஆண்டு தோறும் இழப்பை சந்தித்து வருகிறது. இழப்பை நிவர்த்தி செய்ய மீண்டும் உற்பத்தியை பெருக்க வேண்டியுள்ளது. இதற்கு தண்ணீர், உரம், தட்பவெட்ப நிலை சாதகமாக அமைய வேண்டும். பழம், பருப்பு, காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட அனைத்து வகையான உணவு பொருட்களை முறையாக பதப்படுத்தினால் உண்பதற்கு ருசியாகவும், சத்து குறையாமலும் இருக்கும். இதனால், உழைப்பு, உற்பத்தி வீணாகாது; பொருளாதாரம் மேம்படும்.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் உணவு பதப்படுத்தும் துறை மற்றும் இந்திய பேக்கேஜ் மையம் சார்பில், உணவு பொருள் பதப்படுத்துவது தொடர்பாக மதுரை பாண்டியன் ஓட்டலில் இன்று கருத்தரங்கு நடக்கிறது. மாலையில் பதப்படுத்தப்பட்ட உணவு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம். தென்னிந்திய அளவில் தொழில் முனைவோர் கலந்து கொள்கின்றனர். உணவு பொருள் பதப்படுத்தும் தொழில்நுட்பம், வர்த்தக ரீதியில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து அதிகாரிகள், நிபுணர்கள் விளக்கம் அளிப்பர். பதப்படுத்தும் பிரிவின் சான்று, பட்டயம், முதுகல்வி பற்றி விவரம் கூறப்படும் என்றார். இணை இயக்குனர் ஜி.பி.ரெட்டி, துணை இயக்குனர் பி.கே.கர்ணா, சென்னை மண்டல தலைவர் எம்.காசிவிஸ்வேஷ்வரன், மடீட்சியா தலைவர் சோமசுந்தரம், அலுவலர் கோலப்பன் உடனிருந்தனர்.