உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளையாட்டு போட்டியில் பெண்களுக்குபாலியல் கொடுமையை தடுக்க சட்டம்

விளையாட்டு போட்டியில் பெண்களுக்குபாலியல் கொடுமையை தடுக்க சட்டம்

மதுரை : விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோரை தண்டனைக்கு உட்படுத்த சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தென்மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளியில் சிறுமி படித்தார். அவர் கபடி வீராங்கனை. தேசிய கபடி போட்டியில் பங்கேற்க தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான மாநில போட்டிக்கு அச்சிறுமி தேர்வு செய்யப்பட்டார். வெளியூரில் நடந்த போட்டிக்கு அவரை உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அழைத்துச் சென்றார். சிறுமியை லாட்ஜிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்கு பதிந்தனர். போக்சோ சட்டப்படி உடற்கல்வி ஆசிரியருக்கு கீழமை நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: கீழமை நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையை உயர்த்த, திறமையை தேசத்திற்கு வெளிப்படுத்த, உடற்கல்வி ஆசிரியர் குருவாக, பெற்றோர் போல் செயல்பட்டிருக்க வேண்டும். ஆசிரியர்களிடமிருந்து உயர்ந்த ஒழுக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். தாய் கூலித் தொழிலாளி. சிறுமி பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தார். அவர் கபடி வீராங்கனை. மாநில போட்டியில் பங்கேற்க தகுதியான நபராக இருந்தார். சிறுமியை பாதுகாக்கும் பொறுப்பை எதிர்பார்ப்பு, நம்பிக்கை அடிப்படையில் அவரது தாய் மனுதாரரிடம் ஒப்படைத்தார். பாலியல் வன்கொடுமை மூலம் நம்பிக்கை முற்றிலும் சிதைந்தது.சிறுமி மறுத்தபோது, ​மனுதாரர் கடமையை உணர்ந்து சம்பவத்தை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் அவரது பாலியல் ஆசை சிறுமியிடம் தவறாக நடக்க துாண்டியது. .விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு எதிராக விரைவாக செயல்பட்டு, கடும் தண்டனை விதிக்க வேண்டும். இக்குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டனைக்கு உட்படுத்த சட்டம் இயற்ற வேண்டிய தேவை வந்துவிட்டது. விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் பெண்களை பாலியல் துன்புறுத்தலிலிருந்து பாதுகாப்பது தொடர்பான விவகாரத்தில் 6 மாதங்களில் தமிழக தலைமைச் செயலர் தீர்வு காண வேண்டும்.போட்டியின் போது, பயிற்சியாளர்கள், அமைப்பாளர்களால் ஏற்படும் பாலியல் துன்புறுத்தலைத தவிர்க்க, ​மாணவிகளுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்துச் செல்ல வேண்டும். செலவை மாநில அரசு ஏற்க வேண்டும்.இச்சம்பவத்திற்கு பின் மாணவி படிப்பைத் தொடரவில்லை. விளையாட்டு போட்டியில் பங்கேற்பதையும் நிறுத்திவிட்டார். தகுதி, திறமையுடைய மாணவியின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு கீழமை நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. அதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை