உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அடேங்கப்பா... எவ்வளோ பெருசு... மதுரையில் அறிமுகமான க்யூப் நிறுவனத்தின் எபிக் திரை

அடேங்கப்பா... எவ்வளோ பெருசு... மதுரையில் அறிமுகமான க்யூப் நிறுவனத்தின் எபிக் திரை

மதுரை;மதுரை சிக்கந்தர் சாவடி ரேடியன்ஸ் சினிமாவில் பிரபல க்யூப் நிறுவனத்தின் 'எபிக்' என்னும் பெரிய திரை அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் இரண்டாவதாகவும் மதுரையில் முதன்முறையாகவும் இத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது.க்யூப் நிறுவனம், இந்திய அளவில் 4000 தியேட்டர்களுக்கு திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வினியோகித்து வருகிறது. சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட 'ஐமேக்ஸ்' திரை போன்று இந்நிறுவனம் சார்பில் 'எபிக்' என்னும் பிரம்மாண்ட திரை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.இத்திரை 1.89 விகிதத்தில் தரையில் இருந்து மேல் வரை இருக்கும். இதற்கென பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்பட்ட பார்க்கோ ஆர்.ஜி.பி., லேசர் புரொஜெக்டர் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண புரொஜெக்டரை விட இதன் ஒளியளவு 2 மடங்கு கூடுதலாக இருக்கும். டால்பி நிறுவனத்தின் 'அட்மாஸ்' தொழில்நுட்பத்தின் ஒலியமைப்பு உடையது.இதுகுறித்து ரேடியன்ஸ் சினிமா நிர்வாக பங்குதாரர் ராம்பிரகாஷ் கூறியதாவது:தமிழகத்தில் எபிக் திரையின் இரண்டாவது திரையாக எங்கள் திரையரங்கில் அறிமுகம் செய்துள்ளோம். 'ஐமேக்ஸ்' திரைக்கு நிகரான அனுபவத்தை வழங்கும் இத்திரை கொண்ட அரங்கில் 242 இருக்கைகள் உள்ளன. எந்த இருக்கையில் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியான அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஸ்டேடியம் போன்று இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாதாரண 'சினிமா ஸ்கோப்' திரையில் பார்க்கிற காட்சிகளுக்கும் இதில் பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கும். ஏனெனில், இந்த திரையில் திரையிடுவதற்காகவே ஒரு முழு படத்தையும் மறுசீரமைப்பு செய்வர். இன்றைய காலகட்டத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் இந்த வடிவத்திற்காக மாற்றம் செய்யப்படுகின்றன. தற்போதைய நிலையில் தொழில்நுட்ப ரீதியாக 3டி காட்சிகளை இதில் திரையிட இயலாது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இது மாதிரியான சினிமா அனுபவத்தை சிறிய ஊர்களிலும் கொண்டு செல்லும் நோக்கில் விரைவில் ராஜபாளயத்தில் 3 திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திரையில் முதல் படமாக எந்த படம் திரையிடப்படும் என ஓரிரு நாளில் தெரிவிப்போம் என்றார்.க்யூப் நிறுவனர்கள் ஜெயேந்திரா, செந்தில்குமார், தியேட்டர் மேலாண்மை துணைத் தலைவர் சிவராமன், க்யூபின் வடிவமைப்பாளர் சூர்யநாராயணன், ரேடியன்ஸ் சினிமா நிர்வாக இயக்குனர் ராஜாங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ