| ADDED : ஜூலை 01, 2024 05:35 AM
மதுரை : ''இந்தியாவில் இன்று நடைமுறைக்கு வரும் புதிய சட்ட முறை நீதித்துறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கும்'' என, அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் (தென் தமிழ்நாடு) தெரிவித்துள்ளது.இந்த அமைப்பின் மாநில செயலாளர் கேசவன், தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிகுமார், மாவட்ட தலைவர் ராஜேஷ் சரவணன் கூறியதாவது: 1860ல் இயற்றிய இந்திய தண்டனை சட்டம், 1872 ஆண்டின் இந்திய சாட்சிய சட்டம், தற்போதைய சூழலுக்கு உகந்ததாக இல்லை. இந்தியர்களை அடிமைகளாகவே வைத்திருக்க நடைமுறைப்படுத்திய சட்டங்களை நீக்கிய இந்திய பார்லிமென்டை பாராட்டுகிறோம். புதிய சட்டங்களின்் பயன்களை அனைத்துத் தரப்பினரும் பெற வேண்டும்.இச்சட்ட முறைகள் உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றங்கள் 70 ஆண்டுகளாக வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. தற்கொலைக்கு துாண்டுதல், பாலியல் தொழிலுக்கு தள்ளுதல், கூட்டுக் கொள்ளை போன்றவற்றுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.பலபிரிவுகளாக இருந்த சொத்து தொடர்பான குற்றங்களை ஒரு பிரிவின் கீழ் கொண்டு வந்துள்ளனர். நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான குற்றவழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் உள்ளது. பொய் வழக்குகளில் இருந்து அப்பாவிகளை காப்பாற்றும் பிரிவுகள் உள்ளன.பாதிக்கப்பட்டோர் எங்கிருந்தும் புகார் கொடுக்க, ஜீரோ எப்.ஐ.ஆர்., முறை கொண்டு வரப்பட்டுள்ளது. டிஜிட்டல் குற்றங்கள், சைபர் கிரைம்களை குறைக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க திருத்தம் உள்ளது. திருநங்கையர் ஒரு பாலினமாக ஏற்கப்பட்டுள்ளனர். இச்சட்டம் நீதித்துறையில் பெரும் மாற்றத்தை உண்டுபண்ணும். பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நீதியை பெற்றுத்தரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.