உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளையாட்டு வீரர்களுக்கு இன்சூரன்ஸ், சிகிச்சை மையம் தேவை

விளையாட்டு வீரர்களுக்கு இன்சூரன்ஸ், சிகிச்சை மையம் தேவை

மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு தனி இன்சூரன்ஸ் திட்டமும், அரசு மருத்துவமனையில் விளையாட்டு காய சிகிச்சை மையமும் அமைக்க வேண்டும்.தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பள்ளி மாணவர்களுக்கான தடகள, குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கல்லுாரி மாணவர்களுக்கு மதுரை காமராஜ் பல்கலை மற்றும் பல்கலைகளுக்கு இடையிலான போட்டிகள், முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன.தடகளத்தில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், சுத்தி, வட்டு எறிதல் பயிற்சியின் போதும் கபடி, வாலிபால், ஹேண்ட்பால், கால்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகளின் போதும் கை, கால் மூட்டுகளில் ஜவ்வு விலகுதல், ஜவ்வு கிழிதல் பிரச்னை ஏற்படும். குறிப்பாக கபடி போட்டியின் போது தொடுதல், இழுத்தல், துாக்குதல் முறைகளால் வீரர்கள் காயம் படுவது அதிகம். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விளையாட்டு காய சிகிச்சைக்கு என தனிப் பிரிவு துவக்க வேண்டும் என்கின்றனர் உடற்கல்வி ஆசிரியர்கள்.அவர்கள் கூறியதாவது:அரசு, அரசு உதவி பெறும் மாணவர்கள் செலவில்லாத தனிநபர் போட்டிகள் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் அதிகளவில் பங்கேற்கின்றனர். ஒருமுறை மூட்டு ஜவ்வு விலகினாலோ கிழிந்தாலோ கவனிக்காமல் விடும் பட்சத்தில் அந்த மாணவர்கள் நிரந்தரமாக விளையாட முடியாது என்பதோடு எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும். எத்தைனையோ மாணவர்கள் விளையாட்டில் இருந்தும் விலகியுள்ளனர். ஜவ்வு பிசகியது சரியாகி விடும் என நினைத்து கண்டுகொள்ளாமல் விடும் போது நடக்க முடியாத நிலைக்கு சென்ற பின் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் செல்கின்றனர். விளையாட்டு காய பிரிவுக்கு என தனி வார்டு இருந்தால் மாணவர்கள் உடனடியாக சிகிச்சை பெறலாம்.அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சை செய்வதற்கு முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டம் தேவைப்படுகிறது. அதுபோல விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தனியாக இன்சூரன்ஸ் வசதி செய்ய வேண்டும் என்கிறார் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க மாநில துணைத்தலைவர் சோலைராஜா.அவர் கூறியதாவது: மதுரையில் கபடி வீரர்கள் 3000 பேருக்கு ஓராண்டுக்கு முன் இன்சூரன்ஸ் செய்துள்ளோம். இதன் மூலம் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் 108 பேருக்கு செலவில்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த வீரர்கள் தொடர்ந்து விளையாட்டில் ஈடுபடுகின்றனர். தமிழக அரசு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தனி இன்சூரன்ஸ் வசதி செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை