சத்துணவு கூடங்களுக்கு தரச்சான்று
மதுரை: அரசால் அங்கீகரிக்கப்பட்ட 'கொஸ்ட் சர்டிபிகேஷன்' என்ற நிறுவனத்தின் தணிக்கை குழுவினர் இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் குழுவாக பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மதுரை கிழக்கு ஒன்றியம் மாயாண்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, அரும்பனுார் புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கோரிப்பாளையம், சுப்ரமணியபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி சத்துணவுக் கூடங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கியுள்ளனர்.இதற்கான நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரமசிவன், சத்துணவு அமைப்பாளர்கள் கருப்பாயி, முனிராபானு, இந்திரா, ராமலட்சுமி பங்கேற்றனர். கார்த்திகேயன் கூறுகையில், ''அரசு பள்ளி மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்கவும், சத்தான உணவை உறுதி செய்யவும் 100 சத்துணவு மையங்களை தேர்வு செய்ய ஆய்வு நடக்கிறது. இந்த உணவுக்கூடங்களில் சுடுதண்ணீர் வசதி, உணவு வெப்பமானி, ஜன்னல்கள் பூச்சி வராமல் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள், உணவுப் பாதுகாப்பு அங்கீகாரம், தொற்று இல்லா சான்றிதழ், காய்கறி தோட்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்தது. மதுரை மாவட்டத்தில் 4 சத்துணவு கூடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன'' என்றார்.