உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனஅழுத்தத்தில் மாநகராட்சி பொறியாளர்கள்  யோகா பயிற்சிக்கு கமிஷனர் ஏற்பாடு

மனஅழுத்தத்தில் மாநகராட்சி பொறியாளர்கள்  யோகா பயிற்சிக்கு கமிஷனர் ஏற்பாடு

மதுரை: மதுரை மாநகராட்சியில் பொறியாளர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இலவச யோகா பயிற்சி அளிக்க கமிஷனர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.மாநகராட்சியின் முதுகெலும்பாக பொறியியல் பிரிவு உள்ளது. இப்பிரிவில் உள்ள ஒரு உதவி நிர்வாக பொறியாளர், 2 இளநிலை பொறியாளர்கள், பிரிவு அலுவலர்கள் என அடுத்தடுத்து இதய பிரச்னை ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர்.இத்தகவல் கமிஷனர் சித்ரா கவனத்திற்கு சென்றதும் பொறியியல் பிரிவில் அலுவலர்கள் முதல் பொறியாளர்கள் வரை வாரம் 3 நாட்கள் 'எக்கோ' பார்க்கில் இலவச யோகா பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.அப்பயிற்சியை துவக்கி வைத்த கமிஷனர், மனஅழுத்தம் இன்றி கவனத்துடன் பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். பணிச்சுமை இருந்தால் நேரடியாக என்னிடம் தெரிவிக்கலாம். பணியின்போது மனச்சுமை வேண்டாம். யோகா பயிற்சி பெற்று தொடர்ந்து பின்பற்றுங்கள் என்றார்.

பணிச்சுமை ஏன்

பொறியாளர்கள் சிலர் கூறியதாவது: அரசியல் தலையீடு, வாகனங்கள், பணியாளர்கள் பற்றாக்குறை, அரசியல் பின்புலத்தால் அதிகாரிகளை மதிக்காத ஒப்பந்ததாரர்கள் என பலநிலைகளில் பொறியாளர்கள், அலுவலர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. ஒரு உதவி பொறியாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட வார்டுகளை கண்காணிக்க வேண்டியுள்ளது.உதாரணமாக ஒரு தேர்ச்சி திறன் நிலை 2 அலுவலருக்கு உதவி பொறியாளர் பொறுப்பு வழங்கி அவருக்கு செல்லுார், கோச்சடை, சந்தைப்பேட்டை என 3 லாரி நிறுத்தங்கள், வெள்ளக்கல் குப்பை மேலாண்மை, வெள்ளக்கல், சக்கிமங்கலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கண்காணிப்பு, பம்பிங் ஸ்டேஷன்கள் என பல பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து பிரிவுகளிலும் தொய்வு ஏற்படுகிறது. அதனால் வரும் புகார்கள், அதற்கான நடவடிக்கைகள் தாமதமாவது போன்றவற்றால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.பொறியியல் பிரிவு தலைமையிடத்தில் திட்டமிடல் இல்லாத அதிகாரிகள் நியமனத்தாலும் பணிச்சுமைகள் அதிகரிக்கின்றன. தற்போது இரவு நேரம் என்றும் பாராமல் கமிஷனர் தனியாகவே சென்று ஆய்வு மேற்கொள்வது பாராட்டுக்குரியது. இதுபோல் பொறியியல் பிரிவு பிரச்னைகளையும் விசாரிக்க வேண்டும் என்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ