உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிலையூர் கால்வாயில் கொட்டும் குப்பைக்கு குட்பை தினமலர் செய்தியால் ரூ.6 கோடியில் சீரமைப்பு

நிலையூர் கால்வாயில் கொட்டும் குப்பைக்கு குட்பை தினமலர் செய்தியால் ரூ.6 கோடியில் சீரமைப்பு

திருப்பரங்குன்றம்: தினமலர் செய்தி எதிரொலியாக நிலையூர் கால்வாய் ரூ. 6 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இதனால் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கண்மாய்க்குள் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வட்டார கண்மாய்கள், பெருங்குடி கண்மாய், கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய்க்கு வைகை அணை தண்ணீர் நிலையூர் கால்வாய் மூலம் செல்கிறது. இக்கால்வாய்க்குள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விளாச்சேரியில் இருந்து சந்திரா பாளையம் வரை பிளாஸ்டிக் உள்பட அனைத்து கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரப்பும் மையமாகியுள்ளது.விளாச்சேரியில் இருந்து பெருங்குடி வரை நிலையூர் கால்வாய் பலஇடங்களில் உயரம் குறைவாக உள்ளதால் தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்கிறது. அதேசமயம் நிலையூர் கால்வாய்க்குள் ஆண்டு முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது குறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்திகள் வெளியானது. இதையடுத்து ரூ. 6 கோடியில் சீரமைப்பு பணிகள் துவங்க உள்ளது. இதற்கானபூமி பூஜை விளாச்சேரி ஷட்டர்பகுதியில் நடந்தது. நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், செயற் பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி, ஆய்வாளர்கள் செந்தில்குமார், வரத முனீஸ்வரன், பாலச்சந்தர், ஜான் கென்னடி பங்கேற்றனர்.நீர்வளத்துறையினர் கூறுகையில், ''நிலையூர் கால்வாயில் விளாச்சேரி - பெருங்குடி வரை வலுவிழந்த பகுதிகள், அணையில் தண்ணீர் திறப்பின்போது கால்வாயில் தண்ணீர் வெளியேறும் பகுதிகள் சீரமைக்கப்பட உள்ளன. கால்வாய்க்குள் குப்பை கொட்டுவதை தவிர்க்க பக்கவாட்டில் 10 அடி உயர தடுப்புச் சுவர் அமைக்கப்பட உள்ளது. கண்மாயில் சேதம் அடைந்த ஷட்டர்களும் சீரமைக்கப்பட உள்ளன. முதற்கட்ட பணிகள் நடக்கும் பகுதிகளில் 'ட்ரோன்' மூலம் ஆய்வுப் பணி துவங்கியுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ