மேலுார் பகுதியில் சிப்காட் மத்திய சிறை அமைக்க ஆதரவு தாலுகா வளர்ச்சி பெறும் என விவசாயிகள், மக்கள் நம்பிக்கை
மதுரை: மேலுாரில் சிப்காட், மத்திய சிறை அமைத்தால் தொழில்வளமும் வேலைவாய்ப்பும் பெருகும் என்பதால் இரண்டு திட்டங்களையும் வரவேற்பதாக அப்பகுதி விவசாயிகள், மக்கள் கலெக்டர் சங்கீதாவிடம் உறுதியளித்தனர்.மதுரையில் முதன்முறையாக பெருந்தொழில் நிறுவனங்களுக்கான சிப்காட் வளாகம் அமைக்க தமிழக அரசு முன்வந்தது. மேலுார் வஞ்சிநகரத்தில் 400 ஏக்கரில் சிப்காட் அமைய திட்டமிட்டு அரசாணை வெளியான நிலையில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மேலுார் பகுதி விவசாயிகள் சிப்காட், மத்திய சிறை அமைக்க ஆதரவு தருவதாக தெரிவித்தனர். தொடர்ந்து மேலுார் வஞ்சிநகரம் கன்னங்காடு சிவன் கோயில் பகுதியில் கொடுக்கம்பட்டி, பூதமங்கலம், வஞ்சிநகரம் ஊராட்சி மக்கள் சார்பில் அப்பகுதி மக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். மேலுார் தாலுகா வளர்ச்சிபெறும்
ஆலோசனை கூட்டத்திற்கு பின் கிராமமக்கள் சார்பில் வஞ்சிநகரம், அரிட்டாபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வமணி, முருகன், பார்த்திபன், பரமசிவம், பழனிசாமி, மணி, வெற்றி, வழக்கறிஞர் சசிகுமார், ஐவாபுலி ஆகியோர் கூறியதாவது: கொடுக்கம்பட்டி, பூதமங்கலம், வஞ்சிநகரத்தில் மூன்று ஊராட்சிகளிலும் தலா 17 கிராமங்கள் வீதம் 51 கிராமங்களில் மக்கள் வசிக்கிறோம். 3 ஊராட்சிகளில் மொத்தமாக 600 ஏக்கர் இடம் அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது. அதில் வஞ்சிநகரத்தில் 400 ஏக்கர் பரப்பில் தான் சிப்காட் அமைக்கப்பட உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.அதேபோல மேலுார் செம்பூரில் மத்திய சிறைச்சாலையை கொண்டு வருவதிலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. விவசாயத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் ஆற்றுக்கால் பாசன கால்வாயை சேதப்படுத்தாமல் கட்டடங்கள் உருவாக்கலாம். மத்திய சிறை அமைந்து விட்டால் தினமும் ஆயிரம் பேர் இப்பகுதிக்கு வருவர். அதன் மூலம் கடைகள் பெருகி வியாபாரம் அதிகரிக்கும். வேலைவாய்ப்பும் பெருகும். மொத்தத்தில் இரு திட்டங்கள் மூலம் மேலுார் தாலுகா வளர்ச்சி பெறும்.திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை விட ஆதரவாளர்கள் அதிகம் என்பதால் சிப்காட், மத்திய சிறை கட்டுமானத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி பிப். 24 ல் கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். அதேபோல கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பாக மார்ச் 3 ம் தேதி திட்டங்களுக்கான ஆதரவு போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.