| ADDED : ஜூலை 04, 2024 01:42 AM
மதுரை: மதுரையில் ஓ.சி.பி.எம்., பள்ளியிலும், திருமங்கலத்தில் டி.இ.ஓ., அலுவலகத்திலும் தொடக்க, நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடந்தது. இதுவரை ஒன்றியத்திற்குள் மட்டுமே மாறுதல் செய்யப்பட்ட நிலையில் புதிய உத்தரவுப்படி (எண்: 243) நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி 7 ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரையில் தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பாரதிசிங்கம் தலைமையிலும் திருமங்கலத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையிலும் போராட்டம் நடத்தினர். மேற்கு வட்டார தலைவர் செல்வக்குமரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இருப்பினும் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் 5 தொடக்க பள்ளி தலைமையாசிரியர்கள், ஒரு நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் உத்தரவை டி.இ.ஓ., சுப்பாராஜூ வழங்கினார். டி.இ.ஓ., நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், கண்காணிப்பாளர் பிரபாகரன், அலுவலக பணியாளர்கள் முத்துகருப்பு, கண்ணன், பெலிக்ஸ் தியாகராஜன், காமாட்சி நித்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருமங்கலத்தில் நடந்த கலந்தாய்வில் நேற்றும் மாறுதல் உத்தரவுகள் பெற்றவர்களின் விபரம் வெளியிடப்படவில்லை.திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றவர்களை இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையிலான போலீசார் தடுத்தனர். போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதே கலந்தாய்வு நடந்ததால் கல்வி அலுவலர் அறையில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு கலைந்து சென்றனர்.பதவி உயர்வு தொடர்பாக மாநில சீனியாரிட்டி முறையை பின்பற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி மதுரையில் நடந்த பொதுமாறுதல் கலந்தாய்வு மையங்களில் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர்.