உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கட்டட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் இலவச வண்டல் மண் அனைத்து விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை

கட்டட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் இலவச வண்டல் மண் அனைத்து விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை

மதுரை: விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் என்ற போர்வையில் கட்டட பயன்பாட்டுக்கும் ரியல் எஸ்டேட்காரர்களுக்கும் மேலுார், உசிலம்பட்டி பகுதி கண்மாய்களில் இருந்து கிராவல் மண் கடத்தப்படுகிறது. இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அனைத்து விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். சங்க மாநில கவுரவத் தலைவர் ராமன், இளைஞரணி செயலாளர் அருண் கூறியதாவது: பிறகரை என்பது கண்மாய்க்கு தண்ணீர் வரும் பாதை. அந்த பாதையில் மண்ணை வெட்டி அள்ளினால் நிரந்தரப் பள்ளமாகிவிடும். கண்மாய்க்கு மழைநீரோ, பாசன நீரோ கிடைக்காது. கண்மாய் மடைக்கு முன்னால் வெட்டுப்பள்ளத்தில் 20 மீட்டருக்குஅடுத்த துாரத்தில் தான் மண் அள்ள வேண்டும். கொட்டாம்பட்டியில் உள்ள நீர்வளத்துறைக்கு சொந்தமான உதினிபட்டி கண்மாயின் பிற கரையில் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு செம்மண் அள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். கேட்டால் முறையான பதில் சொல்வதில்லை. வி.ஏ.ஓ., தாசில்தார், கலெக்டரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. உசிலம்பட்டி பகுதியில் திருமங்கலம் பிரதான விரிவாக்க பாசன கால்வாயில் கருகப்பிள்ளை கண்மாயில் விடுமுறை நாளில் 20 லாரி, டிராக்டர்களில் மண் அள்ளுகின்றனர். இங்கே எடுத்து வேறு கிராமத்திற்கு கொண்டு செல்கின்றனர். விவசாய நிலத்தில் ஓரடி உயரத்திற்கு தான் அதிகபட்சமாக வண்டல் மண் கொட்ட முடியும். உண்மையான விவசாயிகளுக்கு வண்டல் மண் கிடைக்கவில்லை. மீனாட்சிபுரம் புள்ளனேரி கண்மாயிலும், நிலையூர் கால்வாயில் நெடுங்குளம் கண்மாயிலும் கிராவல் மண் அள்ளுகின்றனர். வருவாய்த்துறை, நீர்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர்உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என கலெக்டர்சங்கீதாவிடம் வலியுறுத்தியும் குழு அமைக்கவில்லை. வைகை அணையில் இருந்து (செப்.15) ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் போது இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் முழுமையாக சேராது. கண்மாய்க்கு தண்ணீர் சேரும் வழித்தடங்களில் மண்ணை அள்ளக்கூடாது. இதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தாவிட்டால் அனைத்து விவசாயிகளும் ஒன்று கூடி கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை