| ADDED : ஜூலை 05, 2024 05:05 AM
பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றியம் தெத்துார் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் மாணவிகளின் பயன்பாட்டுக்காக ரூ.பல லட்சம் மதிப்பில் கழிப்பறைகள் சமீபத்தில் கட்டப்பட்டன.இப்பகுதியில் மது, கஞ்சா பயன்படுத்தும் சமூக விரோதிகள் விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தை மது அருந்தும் பாராக பயன்படுத்துகின்றனர். மேலும் வகுப்பறை வராண்டாக்களில் சிறுநீர், மலம் கழித்து கழிப்பறையாக மாற்றுகின்றனர். இது குறித்து ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் வாடிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சமூக விரோத கும்பல் புதிதாக கட்டப்பட்ட மாணவிகள், ஆசிரியர்கள் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கழிப்பறைகள், அதன் கதவுகளை உடைத்தும், குழாய்கள் மற்றும் வகுப்பறை கதவுகளையும் சேதப்படுத்தி உள்ளனர். வாடிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.