| ADDED : ஆக 09, 2024 01:17 AM
பேரையூர் : பேரையூரில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனைக்கு 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 600க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர்.சாலை விபத்துகள், அதில் பாதிக்கப்பட்டோர் பேரையூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் முதலுதவி அளித்து, பாதிக்கப்பட்டோரை திருமங்கலம், மதுரைக்கு அனுப்பி வைக்கின்றனர்.விபத்தில் சிக்கி மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு முதலுதவி அளிப்பதில் ஏற்படும் காலதாமத்தால் உயிரிழப்பு நடக்கிறது. இங்கு நான்கு டாக்டர்களே பணியாற்றி வருகின்றனர். இவர்களை இரவில் சுழற்சி முறையில் பணியமர்த்தினால் மறுநாள் பகலில் கூடுதல் பணிச்சுமையால் பாதிக்கப்படுவர். இம்மருத்துவமனையில் ஏழு டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் சாதாராணமான ஆரம்ப சுகாதார நிலையம் போல் உள்ளது.அவசர நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு செவிலியர்கள்தான் சிகிச்சை அளித்து அனுப்புகின்றனர். அமைச்சர், எம்.பி, எம். எல்.ஏ.க்கள் அடிக்கடி மருத்துவமனையை ஆய்வு செய்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இம்மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமித்து இரவிலும் பணியாற்றும் வகையில் சுழற்சி முறையை பின்பற்ற மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.