மதுரையில் புகார்தாரரின் 102 பவுன் நகையை அடகு வைத்த பெண் இன்ஸ்பெக்டர் கைது
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் குடும்ப பிரச்னை புகாரில் கணவர் வீட்டாரிடம் நகையை வாங்கி பெண் வீட்டாரிடம் ஒப்படைக்காமல் அடகு வைத்த மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கீதா 50, கைது செய்யப்பட்டார்.திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் 30. பெங்களூரு ஐ.டி., நிறுவன ஊழியர். இவரது மனைவி அபிநயா 29. சென்னை ஐ.டி., நிறுவன ஊழியர். 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் சில மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இருதரப்பும் திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் கீதா விசாரித்தார்.திருமணத்தின் போது பெற்றோர் வீட்டில் தந்த நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கி தருமாறு அபிநயா போலீசில் கூறினார். இதையடுத்து 102 பவுன் நகைகளை கீதாவிடம் ராஜேஷ் ஒப்படைத்தார். இதை அபிநயா குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 43 லட்சத்திற்கு இன்ஸ்பெக்டர் கீதா அடகு வைத்தார்.இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரில் ஒருமாதத்திற்கு முன் கீதா 'சஸ்பெண்ட் 'செய்யப்பட்டார். இதனால் சில நகைகளை மட்டும் திருப்பி கொடுத்த கீதா 38 பவுன் நகைகளை தராமல் இழுத்தடித்தார். அவரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நகையை அடகு வைத்த பணத்தை கடன்காரர்களுக்கு 'செட்டில்' செய்ததாக கீதா தெரிவித்தார். இவரது கணவர் சரவணன், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார்.