உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையின் முக்கிய சுற்றுலா திட்டங்கள்! ஆண்டுக்கணக்கில் நிதி ஒதுக்காமல் இழுபறி

மதுரையின் முக்கிய சுற்றுலா திட்டங்கள்! ஆண்டுக்கணக்கில் நிதி ஒதுக்காமல் இழுபறி

2018ல் கஜா புயலின் தாக்கத்தால் வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டி அருவிக்கு செல்லும் பாதைகள் சேதமடைந்தன. ஆறாண்டுகளை கடந்தும் இன்னமும் அருவியில் குளிப்பதற்கான விமோசனம் கிடைக்கவில்லை. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருவியை சீரமைக்க சுற்றுலாத்துறை சார்பில் நிதி ஒதுக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது. கடந்தாண்டு தமிழக பட்ஜெட்டில் குட்லாடம்பட்டி உட்பட 3 திட்டங்களை சீரமைக்க நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அருவியை சீரமைப்பதற்காக அனுப்பப்பட்ட விரிவான திட்ட மதிப்பீட்டை (டி.பி.ஆர்.,) மீண்டும் திருத்தம் செய்து புதிய டி.பி.ஆர்., தயாரித்து அனுப்பப்பட்டது. டி.பி.ஆர்., ஒப்புதல் பெற்ற பின் டெண்டர் விடும் பணிகள் தொடங்குவதற்கு எவ்வளவு மாதங்களாகும் எனத் தெரியவில்லை.மதுரை திருமலை நாயக்கர் மகாலின் தர்பார்ஹாலில் 30 ஆண்டுகளுக்கு முந்தைய சாதாரண ஒளிக் காட்சியுடன் 40 நிமிடங்களுக்கு மன்னரின்வரலாறு தமிழ், ஆங்கிலத்தில் ஒலிபரப்பப்படுவதால் மக்கள் பாதியிலேயே வெளியேறுவது தொடர்ந்தது. நேரத்தை குறைத்து லேசர் ஒலி ஒளிக்காட்சி முறையை கொண்டு வரவேண்டுமென மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஓராண்டுக்கு முன் தர்பார் ஹாலின் தரைத்தளத்தை சீரமைக்கும் பணி துவங்கியதால் ஒலி ஒளிக்காட்சி நிறுத்தப்பட்டது. ஓராண்டை கடந்து தரைத்தள பணி முடிந்த நிலையில் மீண்டும் ஒலிபரப்பப்படவில்லை.சோழவந்தான் தென்கரையில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிற்றணை மதுரை - திண்டுக்கல்லை இணைக்கும் வகையில் வைகையாற்றின் குறுக்கே தடுப்பணையாக கட்டப்பட்டுள்ளது. ஆண்டில் 8 முதல் 9 மாதங்கள் படிக்கட்டுகள் வழியாக தண்ணீர் அருவியாக கொட்டுவதை பார்க்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆற்றிலிருந்து இறங்கி தடுப்பணை படிக்கட்டு வழியாக செல்ல முடியாத அளவு பத்தடி ஆழத்தில் ஆறு பள்ளமாக உள்ளது. மேற்பகுதியில் இருந்து தடுப்பணைக்கு செல்ல ஓரடி நீள, அகலத்தில் குறுகிய படிக்கட்டு உள்ளதால் எல்லோருமே பயன்படுத்த முடிவதில்லை. ஆற்றையொட்டி அகல படிக்கட்டுகளை அமைத்தால் பயணிகள் தடுப்பணையில் குளிக்க முடியும். போதுமான இடம் உள்ளதால் கழிப்பறை, உடை மாற்றும் அறை, வாகன நிறுத்துமிடம், உட்காருவதற்கான இருக்கை வசதிகளை அமைக்கலாம். நீர்வளத்துறை சார்பில்ரூ.ஒரு கோடி மதிப்பில் இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சுற்றுலாத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கினால் மக்கள் பயன்பெறுவர்.கோயில், சமணர் படுக்கைகளை தாண்டி மதுரையில் இருக்கும் சில பொழுதுபோக்கு இடங்களை விரைந்து சீர்படுத்த சுற்றுலாத்துறை முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ