மதுரையில் விடுபட்ட வைகை ரோடு பணிகள் ; எப்போது முடியும் என மக்கள் எதிர்பார்ப்பு
மதுரை: நீண்ட நாட்களாக இழுபறியாக உள்ள மதுரை வைகை வடகரை ரோடு பணிகள் எப்போது முடிவடையும் என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.மதுரை வைகை நதிக்கரையோரம் இருபுறமும் தலா 10 கி.மீ., நீளத்திற்கு ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் பணிகள் முடிந்து போக்குவரத்து நடப்பதால் நகருக்குள் நெரிசல் தவிர்க்கப்படுகிறது. மேலும் வாகனங்கள் விரைவாக இடம் பெயரவும் இந்த ரோடுகள் உதவுகின்றன. விடுபட்ட ரோடுகள்
இருப்பினும் இந்த ரோடுகளில் ஆங்காங்கே சில இடங்களில் ரோடு பணிகள் முடியாமல் உள்ளதால் நதிக்கரை ரோடு முழுமை பெறாமல் உள்ளன. இப்பணிகள் எப்போது முடிவடையுமோ என பொதுமக்கள் எதிர்பார்க்க துவங்கிவிட்டனர். தற்போது வைகையின் வடபகுதியில் குருவிக்காரன் சாலை முதல் அண்ணாநகர் வரையான 1100 மீட்டர் பகுதியில் முழுமையாக ரோடு அமைக்கப்பட வில்லை. இப்பகுதியில் தனியார் நிலம் உள்ளதால் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.இதையடுத்து அண்ணாநகர் முதல் வண்டியூர் பகுதி 4 வழிச்சாலையில் பாலம் பகுதியில் இணையும் இடத்தில் 300 மீட்டர் தொலைவுக்கு இன்னும் ரோடு அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் நான்கு வழிச்சாலையுடன் இணையும் இடத்தில் தனியார் நிலம் உள்ளதால் ரோடு பணி தாமதமாகிறது. இந்த இடத்தில் 300 மீட்டருக்கும் ஜல்லிக்கற்களை பல மாதங்களாக குவித்து வைத்துள்ளனர். ரோடு அமைப்பது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''தனியார் நிலம் உள்ளதால் இதுகுறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஓரிரு வாரங்களில் ரோடு அமைக்கும் பணி முடிவடையும்'' என்றனர். புதிய ரோடுகள் எப்போது
இதேபோல வைகையின் தென்கரையில் ராஜாமில் ரோடு முதல் புட்டுத்தோப்பு வரையான 400 மீட்டர் பகுதியிலும் ரோடு அமைக்கப்பட வேண்டும். தவிர திண்டுக்கல் ரோடு காமராஜர் பாலத்திற்கு மேற்கு பகுதியிலும் வைகையின் இருபுறமும் கோச்சடை, சமயநல்லுார் வரை ரோடு அமைக்கும் திட்டம் ஆலோசனையில் உள்ளது.