உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போராட தயாராகும் சத்துணவு ஊழியர்கள்

போராட தயாராகும் சத்துணவு ஊழியர்கள்

மதுரை: காலியிடங்களை நிரப்புவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போராடுவது என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.சத்துணவுத் துறையில் 50 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். மாதம் ரூ.6750 ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வாய்ப்பில்லாததால், அமைப்பாளர்களின் தகுதி அடிப்படையில் பிறதுறைகளில் பணி வழங்க வேண்டும், ஊழியர்களின் ஆண் வாரிசுகளுக்கும் பணிவழங்க வேண்டும். ஓய்வு வயதை 60 ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும். காலை சத்துணவு திட்டத்தை தங்கள் மூலமே நடத்த வேண்டும் என சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.இதற்காக போராடும் ஊழியர்கள் மாநில நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இதில் சில போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு கவனத்தை ஈர்க்க ஒன்றிய அலுவலகங்கள் முன்பு இன்று (ஜூன் 14) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், ஜூன் 25ல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்தனர். அதன்பின்பும் தீர்வு எட்டப்படாவிடில், சமையலர், உதவியாளர் இருவரும் மையங்களின் சாவியை பி.டி.ஓ.,விடம் ஒப்படைப்பது என்று முடிவெடுத்துள்ளனர்.மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான் கூறியதாவது: சத்துணவு பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு பிரசவ விடுப்பு, தகுதி அடிப்படையில் ஆசிரியர் பணியில் முன்னுரிமை வழங்குவது என வலியுறுத்தி வருகிறோம். இதற்காக ஜூன், ஜூலையில் ஒன்றிய மாநாடுகளையும், ஆகஸ்ட், செப்டம்பரில் மாவட்ட மாநாடுகளையும், அக்டோபரில் விருதுநகரில் மாநில மாநாட்டையும் நடத்த தீர்மானித்துள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ