உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விலைவாசி உயர்ந்தும் மானியம் உயரவில்லை

விலைவாசி உயர்ந்தும் மானியம் உயரவில்லை

மதுரை: விதை முதல் விவசாய கருவிகள் வரை பல மடங்கு விலை அதிகரித்துள்ள நிலையில் வேளாண், தோட்டக்கலைத்துறையின் கீழ் பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட மானியத்தொகை தான் தற்போதும் வழங்கப்படுகிறது. உண்மையான 50 சதவீதம் மானியத்தை வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்கின்றனர் தமிழக விவசாயிகள்.அவர்கள் கூறியதாவது: வேளாண் துறையின் விதை கிராமத்திட்டத்தின் கீழ் பத்தாண்டுகளுக்கு முன் 50 சதவீதம் மானியமாக ஒரு கிலோ நெல் விதைக்கு ரூ.17.50, பயறு விதைகள் ரூ.48, குறுந்தானியங்கள் ரூ.26, நிலக்கடலை விதை கிலோ ரூ.36 வழங்கப்பட்டது. இப்போது ஒரு கிலோ நெல்லின் விலை ரூ.39 - ரூ.41, பயறு விதைகள் ரூ.130, நிலக்கடலை விதை ரூ.150, குறுந்தானிய விதை கிலோ ரூ.80க்கு விற்கப்படுகிறது. 50 சதவீத மானியத்தை கணக்கிட்டால் முறையே நெல்லுக்கு ரூ.20 - ரூ.21 வரை, பயறுக்கு ரூ.65, நிலக்கடலைக்கு ரூ.75, குறுந்தானியத்திற்கு ரூ.40 தர வேண்டும். பெயருக்கு 50 சதவீதம் என்று சொல்லி விட்டு பழைய மானியத்தையே ஒரு ஏக்கர் அளவுக்கு அரசு வழங்குகிறது. ஒரு எக்டேருக்கான வரம்பாக உயர்த்தி 50 சதவீத மானியம் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு பயன்படும் ரோட்டோவேட்டர் கருவியின் விலை ரூ.ஒன்றரை லட்சம் வரை ஆகிறது. அதிகபட்சம் ரூ.46ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத மானியமாக ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும். எம்.என். மிக்ஸர் உரங்கள் கிலோ ரூ.35ல் இருந்து ரூ.60 ஆக உயர்ந்து விட்டது. மூடை ஒன்றுக்கு ரூ.2000 ஆகும் நிலையில் பாதியளவு மானியம் வழங்க வேண்டும்.

மானியம் என்பது மாயை

காய்கறி, பழங்கள், பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் விளைபொருட்களை பாதுகாத்து தரம்பிரிக்க 600 சதுரஅடியில் சிப்பம் கட்டுவதற்கு 2007 - 08 ல் ரூ.4 லட்சம் செலவானது. அதற்கு 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது அதே 600 சதுர அடியில் சிப்பம் கட்ட ரூ.8 முதல் ரூ.9 லட்சம் செலவாகிறது. மணல், சிமென்ட், ஜல்லி என அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டது. 17 ஆண்டுகள் கழித்தும் அதே ரூ.2 லட்சம் தான் மானியம் தரப்படுகிறது. ஆனால் 50 சதவீத மானியம் என்று பெயர் சூட்டுகின்றனர். இதற்கு ஒரு எக்டேர் சாகுபடி செய்ய வேண்டும் அல்லது 1000 சதுர மீட்டரில் 'பாலிஹவுஸ்' அமைக்க வேண்டும். காய்கறி பயிர்களைப் பொறுத்தவரை விவசாயிகள் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்வதே அதிகம் என்பதால் ஒரு ஏக்கராக குறைக்க வேண்டும்.ஒரு எக்டேரில் வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் 25 டன் கொள்ளளவுள்ள சேமிப்பு பட்டறை கட்ட ரூ.87ஆயிரத்து 500 வழங்குவதை இருமடங்காக்க வேண்டும். மேலும் ஒரு ஏக்கரில் பயிரிடும் விவசாயிக்கு 10 டன் கொள்ளளவில் பட்டறை கட்டுவதற்கு அனுமதி தரவேண்டும். இவற்றையெல்லாம் வேளாண் பட்ஜெட்டில் செயல்படுத்த வேண்டும் என்றனர் விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ