விதைப்புக்கு தயாரான மானாவாரி விவசாயிகள்
பேரையூர்: பேரையூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. பருவ மழையை மட்டுமே நம்பி உள்ள மானாவாரி நிலங்களில் சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்படும். செழிப்பான இறவை பாசன நிலங்களில் நெல், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த மாதம் மக்காச்சோளம், சோளம், கம்பு உள்ளிட்டவை அறுவடை செய்து முடித்த நிலையில் தற்போது உழவு செய்தும் இயற்கை உரங்களை இட்டும் நிலங்களுக்கு புத்துணர்வூட்டி வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: சாகுபடி பணிக்காக ஆட்டுக்கிடை போட்டு உழவு செய்து விதைப்புக்கு நிலத்தை தயார் படுத்தி வைத்துள்ளோம். மழையை எதிர்நோக்கி உள்ளோம். மழை பெய்தால் எள், உளுந்து போன்ற பயிர்களை விதைப்பதற்கு தயார் நிலையில் உள்ளோம் என்றனர்.