உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் * கிராமப்புற பணிகள் பாதிப்பு

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் * கிராமப்புற பணிகள் பாதிப்பு

மதுரை: அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள தற்செயல் விடுப்பு எடுத்து போராடியதால் கிராமப்புற பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்துவது, மக்கள் தொகைக்கு ஏற்ப கிராம ஊராட்சிகளை பிரிப்பது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊராட்சி செயலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்வது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்காக நேற்று மாநில அளவில் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை நடத்தினர். மதுரையிலும் 13 ஒன்றியங்கள், கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஊராட்சி செயலர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பி.டி.ஓ.,) வரை பணியாற்றும் 300க்கும் மேற்பட்டோர் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்தனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. கிராமப்புறங்களில் வரிவசூல், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட பணிகள் பாதிப்படைந்தன.சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறுகையில், ''எங்கள் கோரிக்கை குறித்து இன்று அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லையெனில் நாளை (மார்ச் 15) விழுப்புரத்தில் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செயவர்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி