டிரான்ஸ்பார்மரில் விழுந்த மயிலுக்கு ‛ஷாக் ; ‛ஒயர்களை மாற்ற வனத்துறை பரிந்துரை
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒயரில் தாவி ஏறிய பெண் மயில் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தது. அம்மயிலை நாய்கள் தாக்க முயன்ற போது ஊழியர்கள் அதை மீட்டு வனத்துறைக்கு தெரிவித்தனர். வன உயிரினச்சரக அலுவலர்கள் கால்நடை பன்முக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.வன அலுவலர்கள் கூறியதாவது: அரசு மருத்துவக்கல்லுாரி, அமெரிக்கன் கல்லுாரி வளாகங்களில் மயில்கள் அதிகம் உள்ளன. ஒரு மயில் மின் ஒயரில் உட்கார்ந்து இறக்கைகளை விரித்த போது இரண்டு ஒயர்களில் பட்டதால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது. சிகிச்சைக்குப் பின் நன்றாக உள்ளது. பெருமாள் மலை காப்புக்காடு பகுதியில் விடப்படும். டிரான்ஸ்பார்மரில் வரும் எலக்ட்ரிக் ஒயர்களின் மேல் பிளாஸ்டிக் மோல்டு அமைக்க வேண்டும்.பிளாஸ்டிக் அல்லது ரப்பர் மோல்டட் ஒயர்கள் என தனியாக இருக்கும். இந்த வயர்களை டிரான்ஸ்பார்மரில் இணைத்தால் பட்டாம்பூச்சி, மயில் உட்பட எந்த பறவையையும் மின்சாரம் தாக்காது. கல்லுாரிகள், தொழில் நிறுவனங்களில் மரங்கள் அடர்ந்த பகுதிகளில் மயில்கள் உலவும் என்பதால் அவற்றின் பாதுகாப்பு கருதி அங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஒயர்களை மின்சாரம் தாக்காத வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றனர்.