மாநகராட்சி பள்ளியில் மணக்கும் சமையல் கலை பிரியாணி தயாரித்த மாணவர்கள்
மதுரை: மதுரை சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு புதிதாக சமையல் கலை பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. முதல் பயிற்சியில் 'கம கம' வெஜ் பிரியாணி சமைத்து மாணவர்கள் அசத்தினர்.இப்பள்ளி 6 - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிசாரா செயல்பாடாக சமையல் கலை குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து எளிமையான உணவுகளை தாங்களே எவ்வாறு தயாரிக்கலாம்என்ற பயிற்சிக்கு தலைமையாசிரியர் ஜெயசீலன் கிறிஸ்டோபர் ஏற்பாடு செய்தார். மாணவர்களுக்கு சத்துணவு மைய சமையலர் நாகலட்சுமி சமையல் கலையின் நுணுக்கங்களை கற்றுத்தந்தார்.ஜெயசீலன் கிறிஸ்டோபர் கூறியதாவது: சில எளிய உணவுகளை ஆண்களும் சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அந்த எண்ணத்தில்தான் மாணவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. பல்வேறு கல்விசாரா செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சமையல் கலை தன்னம்பிக்கை ஏற்படுத்தும். மாதம் இரண்டு முறை பள்ளி நேரம் முடிந்த பின் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் பயிற்சியில் எலக்ட்ரிக் ஸ்டவ் மூலம் 'வெஜ் பிரியாணி சமைக்கப்பட்டது. காய்கறிகளை 'கட்' செய்து பிரியாணி செய்முறையை அறிந்து மாணவர்கள் அசத்தினர். எப்போதாவது வீட்டில் மாணவர்களே சில உணவுகளை தயாரிக்க இப்பயிற்சி கை கொடுக்கும் என்றார்.