| ADDED : ஜூலை 01, 2024 04:51 AM
அவனியாபுரம் : ''தமிழக அரசு மெத்தனால் மாபியா கும்பலை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் மேலும் கூறியதாவது:மேலவளவு கிராமத்தில் பலியானோருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி போதிய இழப்பீடு வழங்க வேண்டும். கள்ளச் சாராய சாவு இந்தியா முழுமையும் உள்ளது. இதற்கு தீர்வாக பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி செப்.17 ல் மகளிர் மாநாடு நடத்தப்படும். டாஸ்மாக் கடையாலும் பாதிப்பு உள்ளது என்பதால், தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை அமல்படுத்துவது அவசியம்.லோக்சபாவில் ஜனாதிபதியின் உரை உண்மைக்கு மாறாக உள்ளது. பா.ஜ., பெரும்பான்மை பெற்றதாக கூறுவது தவறு. கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவு. அயோத்தி கோயில் உள்ள தொகுதியில் பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. சபாநாயகர் ஓம்பிர்லா ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்.நடிகர் விஜய், மாணவர்களிடம் பேசியதில் பிழையும் உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. அவர் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதை, மாணவர்களை நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் எனக் கூறியதாகவே நான் கருதுகிறேன்.கள்ளுக் கடைகள் திறப்பதன் மூலம் கள்ள சாராய சாவுகள் தடுக்கப்படும் என்கின்றனர். கள்ளக்குறிச்சிக்கு நான் சென்றபோது அங்குள்ள மக்கள் கூறியது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றுதான். முதல்வர் டாஸ்மாக் கடையை மூடினால் மக்களிடம் ஆட்சிக்கு நல்லபெயர் ஏற்படும். கள், டாஸ்மாக் மது உட்பட எந்த வகை மதுவும் வேண்டாம். ஆணவ படுகொலைகளை தடுக்க காவல் துறையில் தனி உளவுப் பிரிவு தொடங்க வேண்டும் என்றார்.
முதல்வர் கனவுடன் கட்சி துவங்குகின்றனர்
மேலுார்: மேலவளவில் இறந்த ஏழு பேருக்கு வி.சி.க., தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தி பேசியதாவது:முதல்வர் கனவுடன் தற்போது அரசியல் கட்சி துவங்குகின்றனர். அடுத்த முதல்வர் நான்தான் என அறிவித்துக் கொள்கின்றனர். மேலவளவு படுகொலைக்கு பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என்ற துாண்டுதல் இருந்தது. ஆனால் நான் அதை செய்யாமல் போராட்டம், ஊர்வலம் என அரசியல் நடவடிக்கையாக மாற்றியதால் வி.சி.க., பார்லிமென்ட் வரை சென்றுள்ளது. வி.சி.க. அங்கீகாரம் பெற்ற இயக்கம். அதனால்தான் தற்போது 4 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 2 எம்.பி.,க்கள் என தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக எழுச்சி பெற்றுள்ளது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல்வாதிகள் சொல்கின்றனர். மக்கள் மதுபானக்கடையை மூட சொல்கின்றனர். நேற்று ராமநாதபுரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே போலீசார் வழக்கு போடுகின்றனர். முழு மதுவிலக்கில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.