7 மாதங்களில் ரேபிஸ் தாக்கி 20 பேர் பலி நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்
சென்னை: 'தமிழகத்தில் ஏழு மாதங்களில் நாய்க்கடியால், 3.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 'ரேபிஸ்' நோயால், 20 பேர் உயிரிழந்துள்ளனர். நாய்க்கடிக்கான தடுப்பூசி போட்டிருந்தாலும், தொடர் சிகிச்சை அவசியம்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3.67 லட்சம் பேர் வரை நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 20 பேர் ரேபிஸ் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ரேபிஸ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 40 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாய்க்கடி காயங்களை முறையாக கிருமி நாசினி வைத்து துாய்மைப்படுத்தாமல் இருந்தால், தொற்று ஏற்படக்கூடும். தடுப்பூசிகளை தவற விட்டாலோ, உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்தாலோ, 'ரேபிஸ்' நோய் பரவுவதை தடுக்க முடியாது. ஆழமான காயங்களுக்கு, 'ரேபிஸ் இம்யூனோ குளோபுலின்' எனப்படும், விரைவு எதிர்ப்பாற்றல் மருந்துகளைவழங்காமல் இருப்பதும், ரேபிஸ் வருவதற்கு வாய்ப்பாக அமைகிறது. காயங்களின் அளவுமற்றும் ஆழத்தை மதிப்பிட்டு, சிகிச்சை பெற வேண்டும். மேலும், முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், 21வது நாள் என, நான்கு தவணைகளாக தடுப்பூசி செலுத்துவது கட்டாயம். இது போன்ற தொடர் சிகிச்சைகளை தவற விடுவோருக்கு, ரேபிஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு தொற்று ஏற்பட்டால், உயிரிழப்பு நிச்சயமாக உள்ளது. எனவே, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் கடித்தால், அலட்சியம் காட்டாமல் சிகிச்சை பெற்றால், ரேபிஸ் பாதிப்பை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள்கூறினர்.