திருடிய வைரத்தை விற்க வாட்ஸாப்பில் விளம்பரம் ஓய்வு எஸ்.ஐ., உட்பட 3 பேர் கைது
மதுரை: வியாபாரியிடம் திருடிய, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்களை விற்க, 'வாட்ஸாப்'பில் விளம்பரம் செய்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., உட்பட மூ வர் சிக்கினர். மதுரை நகைக்கடை பஜாரில் உள்ள தொட்டியன் கிணற்று சந்தை சேர்ந்தவர் செல்வராஜ், 69; வைர வியாபாரி. செப்., 27ல் தன்னிடம் இருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்களை சோதனை செய்வதற்காக திருச்சி ஜான்பாஷா தெருவில் உள்ள கடைக்கு வந்தார். திருச்சி தேவர் மண்டபம் அருகே கூட்டமான பஸ்சில் சென்றார். சிறிது துாரம் சென்ற பின், சட்டைப்பையில் இருந்த வைரக்கற்கள் இருந்த பை மாயமானது. யாரோ பிக்பாக்கெட் அடித்தது தெரிந்தது. காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், மதுரை நகை வியாபாரிகளுக்கான வாட்ஸாப்பில், 'வைரக்கற்கள் விற்பனைக்கு' என ஒருவர் தகவல் பரிமாறினார். அதை செல்வராஜ் பார்த்தார். வைரக்கற்களுடன் இருந்த பை தன்னுடையது போல் இருந்ததால் அதிர்ச்சியடைந்து, தெற்குவாசல் போலீசுக்கு தெரிவித்தார். போலீசார் விசாரித்தனர். வாட்ஸாப் தகவல் அனுப்பிய நபரிடம் விசாரித்தபோது, மதுரை, உத்தங்குடி பாண்டியன், 63, மேலுார் முகமது சயீத் இப்ராகிம், 28, நாகமலை புதுக்கோட்டை சரவணன், 32, ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. பாண்டியன் மதுரை நகரில் போலீஸ் எஸ்.ஐ.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்களிடம் விசாரித்தபோது, திருச்சியைச் சேர்ந்த ஒருவர் தங்களிடம் கொடுத்து விற்க ஏற்பாடு செய்யுமாறு கூறியதாக தெரிவித்தனர். பாண்டியன் உட்பட மூவரையும் பிடித்து, திருச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரிக்கின்றனர்.