கரூர் சம்பவத்தில் 41 பேர் மரணம் த.வெ.க.,வினர் முன்ஜாமின் மனு
மதுரை : கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.,27 இரவு த.வெ.க., பிரசார கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசியபோது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இவ்வழக்கில் த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனந்த் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனு: அரசியல் காரணங்களுக்காக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. போலீசார் போதிய பாதுகாப்பு அளிக்க தவறினர். கூட்டம் நடத்துவதற்கேற்ப பெரிய இடத்தை ஒதுக்குமாறு எஸ்.பி.,யிடம் மனு அளித்தோம். ஒதுக்கவில்லை. கூட்டத்தில் சில குண்டர்கள் நுழைந்தனர். விஜய் பேசியபோது காலணிகளை வீசினர். நோயாளி உள்ளே இல்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்தில் நுழைந்ததால் நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் செல்ல மாற்று வழித்தடம் இருந்தும் கூட்டத்திற்குள் அதை போலீசார் அனுமதித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். விஜய் பேசத் துவங்கிய 5 நிமிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இறந்தவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீடு தலா ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சத்தை விஜய் அறிவித்துள்ளார். எனது கவனக்குறைவால் சம்பவம் நடந்ததாக கூற முடியாது. பெண்கள், குழந்தைகள் பங்கேற்பதை தவிர்க்குமாறு தெரிவித்தோம். எதிர்பாராத அளவு கூட்டம் கூடியது துயர சம்பவத்திற்கு காரணம். கூட்டத்தினரை கட்டுப்படுத்த அரசு இயந்திரம் தவறிவிட்டது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுபோல் நிர்மல்குமார் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். தசரா விடுமுறைக்கால சிறப்பு அமர்வு அக்.,3ல் விசாரிக்க வாய்ப்புள்ளது.