அடிப்படை வசதி இல்லாத மயானம்
வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி சாமிநாதன் நகர் மயானத்தை பவர் ஹவுஸ், மகா கணபதி நகர், சத்தியமூர்த்தி நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு வைகைக் கரையில் இருந்த மயான கட்டடம் சமயநல்லுார் வரை அமையும் சாலை பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது அப்பகுதியில் புதிதாக ரூ.பல லட்சம் மதிப்பில் எரியூட்டும் மேடை கட்டி 6 மாதங்களுக்கும் மேலாகிறது, இன்றுவரை தண்ணீர், மின் விளக்கு வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்லும்போதும் இறுதிச் சடங்குகளைச் செய்ய தண்ணீர் வசதியின்றி சங்கடங்களை சந்திக்கின்றனர். மயானத்திற்கு அடிப்படை வசதிகளை செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.