வயல் வெளியில் வாத்து கூட்டம்
அலங்காநல்லுார்: சமயநல்லுார் அருகே தோடனேரி பகுதியில் கண்மாய், கால்வாய் பாசனத்தில் சாகுபடி செய்த நெல் அறுவடை பணிகள் முடிந்துள்ளது. விவசாயிகள் நிலத்தில் உழவு, வயல்களில் தண்ணீரை நிறுத்தி நாற்றங்கால் அமைக்க தயார் செய்வது, நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வயல்களில் மண் வளத்தை அதிகரிக்க ஆடு, மாடுகளை இரவு நேரங்களில் நாட்கணக்கில் கிடை அமர்த்துவது வழக்கம். அதேபோல் பாசன நீரை நிறுத்தியுள்ள வயல்களில் வாத்துகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இதனால் வயலில் உள்ள புழு, பூச்சிகள், தானியங்களை கூட்டமாக உட்கொள்ளும் வாத்துக்கள் உணவு தேவையை பூர்த்தி செய்வதுடன் அவற்றின் கழிவுகளால் மண்ணுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. இதற்காக நிலஉரிமையாளர் விருப்பப்படி, வாத்து வளர்ப்போர் இப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். முட்டை, இறைச்சிக்காக வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. கேரள வியாபாரிகள் அவ்வப்போது வந்து வாத்து முட்டை வாங்கிச் செல்கின்றனர். வயல்களில் 'பக் பக்' சப்தத்துடன் இரை தேடும் வாத்து கூட்டம் காண்போரை வெகுவாக கவர்கிறது.