| ADDED : ஆக 23, 2025 05:04 AM
மதுரை: வீடு கட்டும் போது புதையல் கிடைத்துள்ளதாகவும், அதில் இருந்த தங்கம், வெள்ளியை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறி மதுரையில் மோசடி செய்ய கர்நாடகா கும்பல் திட்டமிட்டு பேசி வருவது தெரியவந்துள்ளது. மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள டயர் நிறுவனத்திற்கு போன் செய்த நபர், அதன் ஊழியரிடம் டயர் விலை குறித்து கன்னடம் கலந்த தமிழில் விசாரித்தார். பின்னர் 'கர்நாடகாவின் ஹூப்ளியில் வீடு கட்ட பள்ளம் தோண்டினோம். அதில் சட்டை பொத்தான் சைஸில் தங்கம், வெள்ளி இருந்தன. எடை போட்டு பார்த்ததில் மூன்றரை கிலோ தங்கம், ஒன்றரை கிலோ வெள்ளி இருந்தன. அதனை விற்க ஆள் தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் ஹூப்ளிக்கு வாங்க. பொருளை பார்த்துவிட்டு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கிச் செல்லுங்க' என ஆசைவார்த்தை கூறினார். ஏமாற்றும் கும்பல் இந்நபர் மோசடிக்காரர் என உணர்ந்த ஊழியர், அவரிடம் மேலும் விபரம் கேட்க, 'நீங்க ஹூப்ளிக்கு நேராக வரவேண்டாம். 100 கி.மீ., முன்னாடி வந்து நில்லுங்க. நாங்கள் உங்களை அழைத்துச்செல்கிறோம்' என்று கூறினார். 'தேவையெனில் நானே உங்களை தொடர்பு கொள்கிறேன்' என்று கூறிய ஊழியர் இணைப்பை துண்டித்தார். உடனே அலைபேசி மூலம் ஹூப்ளி போலீசை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். விசாரணை நடக்கிறது. மதுரையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இக்கும்பலிடம் ஒருவர் ரூ.8 லட்சம் ஏமாந்தார். அதை மீட்க அவனியாபுரம் போலீஸ் எஸ்.ஐ., ஒருவரை அழைத்துக்கொண்டு ஹூப்ளி சென்றபோது, அந்த கும்பல் இருவரையும் சுற்றி வளைத்து தாக்கியது. உடனடியாக எஸ்.ஐ., அம்மாநில அவசர போலீஸ் எண்ணுக்கு தகவல் தெரிவிக்க, உள்ளூர் போலீசார் வந்து இருவரையும் மீட்டு அனுப்பி வைத்தனர். மாநிலம் தோறும் மோசடி போலீசார் கூறியதாவது: நிறுவனங்களின் போன் எண்களை இணையதளங்களில் தேடி இக்கும்பல் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அந்தந்த மொழிகளில் பேசி மோசடி செய்து வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே இந்த மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குற்றங்களில் ஈடுபடுவோர் தங்கியுள்ளது போல், இவர்கள் ஹூப்ளி அருகே கூட்டமாக தங்கியுள்ளனர். இவர்கள் ஆன்லைன் மோசடியிலும் கில்லாடிகள். முன்பு பாதுகாப்பு படை வீரர் போல் பேசி, வீடு மாறி செல்வதால் பொருட்களை பாதிவிலைக்கு விற்பதாக கூறி மோசடி செய்தனர். தற்போது புதையல் இருப்பதாக கூறுகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு புதுக்கதை கூறி ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு கூறினர்.