தற்காலிக ஊழியர் நியமனம் ஒழிப்பு: கோர்ட் நம்பிக்கை
மதுரை, : நிரந்தர பணியிடங்களில் குறைந்த சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களை ஈடுபடுத்துவதை எதிர்காலத்தில் அரசு மற்றும் அதன் அமைப்புகளால் ஒழிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நம்பிக்கை தெரிவித்தது.மதுரை மாநகராட்சியில் 2013 ல் முருகேசபாண்டியன் டிரைவராக நியமிக்கப்பட்டார். 12 ஆண்டுகளாக பணியில் தொடர அனுமதிக்கப்பட்டார். அவர் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக்கோரி மதுரை தொழிலாளர் உதவி கமிஷனரிடம் (அமலாக்கம்) மனு செய்தார். நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து மாநகராட்சி கமிஷனர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: மாநகராட்சி தொழிற்சாலை பிரிவின் கீழ் வராது. நிரந்தரம் செய்யக்கோரும் சட்டப் பிரிவு முருகேசபாண்டியனுக்கு பொருந்தாது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணைப்படி குறிப்பிட்ட திட்டத்திற்கு 'அவுட்சோர்சிங்' பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அத்திட்டம் முடிந்துவிட்டது. நிரந்தர அந்தஸ்து வழங்குவது குறித்த கேள்வி எழவில்லை. தொழிலாளர் உதவி கமிஷனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:ஏற்கனவே இதுபோன்ற ஒரு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு,' 81 தொழிலாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க தொழிலாளர் ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மாநகராட்சியின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. நிரந்தர பணியிடங்களில் குறைந்த சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களை ஈடுபடுத்துவதை எதிர்காலத்தில் அரசு மற்றும் அதன் அமைப்புகளால் ஒழிக்கப்படும் என நம்புகிறோம்' என உத்தரவிட்டது. இவ்வழக்கில் மாநகராட்சி தரப்பின் கருத்து ஏற்புடையதாக இல்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.