உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறைகேடு விசாரணையை சந்திக்க அ.தி.மு.க., ரெடியா...: மதுரை மாநகராட்சி அவசரக்கூட்டத்தில் தி.மு.க., கிடுக்கிப்பிடி

ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறைகேடு விசாரணையை சந்திக்க அ.தி.மு.க., ரெடியா...: மதுரை மாநகராட்சி அவசரக்கூட்டத்தில் தி.மு.க., கிடுக்கிப்பிடி

மதுரை: 'அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நடந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு விசாரணையை எதிர்கொள்ள அ.தி.மு.க., தயாரா' என மதுரை மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். மாநகராட்சியில் நடந்த சொத்துவரி முறைகேடு விவகாரம் எதிரொலியாக மேயர் இந்திராணி தனது பதவியை அக்., 16ல் ராஜினாமா செய்தார். அதை ஏற்பது தொடர்பான அவசரக் கூட்டம் துணைமேயர் நாகராஜன், கமிஷனர் சித்ரா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது மாநகராட்சி மன்றச் செயலாளர் சித்ரா, மேயர் ராஜினாமா தொடர்பான தீர்மானத்தை வாசித்தார். அதில் 'குடும்பச் சூழல் காரணமாக இந்திராணி ராஜினாமா செய்துள்ளதாக' குறிப்பிட்டார். அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் ஏற்கப்பட்டதாக கூறி, 5வது நிமிடத்தில் கூட்டம் நிறைவு பெறுவதாக கமிஷனர், துணை மேயர் அறிவித்தனர். அப்போது அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா, மாநகராட்சியில் நடந்த சொத்துவரி முறைகேட்டை முதலில் அ.தி.மு.க., தான் வெளிக்கொண்டுவந்தது. அதன் தொடர்ச்சியாக மேயர் பதவி விலகியுள்ளார். இது எங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்றார். இதனால் கடுப்பான தி.மு.க., கவுன்சிலர்கள் குழுத் தலைவர் ஜெயராம், கணக்கு குழுத் தலைவர் நுார்ஜஹான், கல்விக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் ரோஹிணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, 'மாநகராட்சியில் அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏராள முறைகேடுகள் நடந்தன. அதுதொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் விசாரணையை எதிர்கொள்ள அ.தி.மு.க., தயாரா' என கோஷமிட்டனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டம் கூட்டம் முடிந்த பின் 45வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சண்முகவள்ளி, தனது வார்டில் பாதாளச் சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகள் தீரவில்லை. மக்கள் கேள்வி கேட்கின்றனர் என ஒரு மணிநேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்ட அரங்கில் லைட்டுகள், ஏசி 'ஆப்' செய்யப்பட்டது. இதனால் இருட்டிலும் போராட்டத்தை தொடர்ந்தார். அவரிடம் துணைமேயர் நாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் அவரது வார்டில் துணைமேயர் ஆய்வு செய்தார். மாநகராட்சி அதிகாரிகள், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

மேயரைக் கூட தேர்வு செய்ய முடியாத தி.மு.க.,

கூட்டத்திற்கு பின் சோலைராஜா கூறியதாவது: சொத்துவரி முறைகேட்டில் மேயரை நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் அ.தி.மு.க., போராட்டம் நடத்தியது. அ.தி.மு.க.,வின் தொடர் அழுத்தம் காரணமாகவே மேயர் ராஜினாமா செய்துள்ளார். இது அ.தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி. புதிய மேயராக யார் ஆதரவாளரை கொண்டுவருவது என்பது தொடர்பாக உள்ளூர் அமைச்சர்களுக்குள் ஈகோ யுத்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு மேயரை கூட நியமிக்க முடியாத நிலை தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் முட்டுக்கட்டையால் புதிய மேயரை நியமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழுத் தலைவர்கள் பதவிகள் காலியாக உள்ளன. தற்போது மேயர் பதவியும் காலியாகிவிட்டது. தி.மு.க.,வால் ஒரு பதவியை கூட நிரப்ப முடியவில்லை. மழைக்காலம் துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி செய்வது. மக்கள் பிரச்னைகளை யாரிடம் தெரிவிப்பது என்ற குழப்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivagiri
அக் 18, 2025 19:42

அழகான கோவில்நகரை , ஐம்பது வருடமாக சிதைத்து சின்னாபின்னமாக்கிய பெருமை தீயமுகாவின் மதுரை வாரிசுக்கே சேரும் . . .


Devanand Louis
அக் 18, 2025 10:39

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் தற்போது பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் sewer canal பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் ஒப்பந்ததாரர் தரமற்ற சிமெண்ட் கலவையை substandard cement mix ratio பயன்படுத்துகிறார். இதற்குக் காரணம், ஒப்பந்ததாரர் திமுக கவுன்சிலர்களுக்கும் சில பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கமிஷன் அழுக்கு பணம் வழங்குவதால் தரக்குறைவான பணிகள் நடைபெறுகின்றன. மேலும், இந்தப் பணிகளுக்கு உரிய மேற்பார்வை, சோதனை மற்றும் சரிபார்ப்பு ஆகியவை முறையாக செய்யப்படவில்லை. வாய்க்கால் கட்டுமானப் பணிகள் முடிந்த பின், அதனைச் சுற்றியுள்ள நடைபாதைகள் sideways சரியாக அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட குழிகள் மற்றும் மணல் நிரப்பாத பகுதிகளால் மக்கள் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ நேர்ந்தால் அதற்கான முழுப் பொறுப்பும் திருமங்கலம் நகராட்சியின்மேல் இருக்கும். அத்துடன், இந்தக் கழிவுநீர் வாய்க்கால்கள் திறந்தவாறு விடப்படக் கூடாது. அவை தகுந்த தகடுகள் slabs மூலம் மூடப்பட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் கொசுக்கள் பெருகும் அபாயம் உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை