உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் நவ.,25ல் அ.தி.மு.க., கள ஆய்வுக்கூட்டம்: உட்கட்சி பூசலை தடுக்க தீவிரம்

மதுரையில் நவ.,25ல் அ.தி.மு.க., கள ஆய்வுக்கூட்டம்: உட்கட்சி பூசலை தடுக்க தீவிரம்

மதுரை: கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள், செயலாளர்களின் கருத்துகளை கேட்கவும் மதுரையில் நவ.,25ல் அ.தி.மு.க., களஆய்வுக் கூட்டம் நடக்கிறது. நெல்லை, கும்பகோணம் கூட்டங்களில் உட்கட்சி பூசல் வெடித்தது போன்று மதுரையிலும் வெடிக்காமல் இருப்பதற்கான முயற்சியில் நிர்வாகிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தோல்விக்கான காரணங்களை கண்டறியவும், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் கிளை, வார்டு, மாவட்டம், சார்பு அமைப்புகளின் பணிகள் குறித்து களஆய்வு செய்து கருத்துகளை அறியவும் பொதுச்செயலாளர் பழனிசாமி 10 பேர் கொண்ட 'களஆய்வு' குழுவை அமைத்தார். இக்குழுவில் உள்ளவர்கள் தனித்தனியே மாவட்ட வாரியாக சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்று நெல்லையில் வேலுமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் உட்கட்சி பூசல் வெடித்தது. அதேபோல் கும்பகோணத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது.இந்நிலையில் மதுரையில் நவ.,25ல் நத்தம் விஸ்வநாதன், செம்மலை பங்கேற்கும் களஆய்வுக்கூட்டம் நடக்கிறது. காலையில் நகர் மாவட்டம் சார்பில் தொழில் வர்த்தக சங்க கட்டடத்திலும், மாலையில் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் மரகதம் மகாலிலும் நடக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக இக்கூட்டம் நடப்பதால் உட்கட்சி விவகாரங்களை தெரிவிக்க சிலர் தயாராகி வருகின்றனர்.பன்னீர்செல்வம், தினகரன் நீக்கத்தால் கட்சியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களை மீறி யாரையும் வளரவிடாமல் 'அடக்கி' வைத்திருக்கும் சூழலை கூற உள்ளனர்.அவர்கள் கூறியதாவது: இக்கூட்டம் கண்துடைப்பாகத்தான் நடக்கப்போகிறது. செயலாளர்கள், நிர்வாகிகள் குறித்து புகார் கூறினாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. மதுரையை பொறுத்தவரை செயலாளராக உள்ள செல்லுார் ராஜூ, ராஜன்செல்லப்பா, உதயகுமார் சொல்வதைதான் கட்சி தலைமை வேதவாக்காக கருதுகிறது. களஆய்வு என்பது பூத் அளவில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் ஒரு மண்டபத்தில் கூட்டம் நடத்துவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. அங்கு வருபவர்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்களின் ஆதரவாளர்கள்தான். அவர்கள் எப்படி கட்சியின் உண்மை நிலையை தெரிவிப்பார்கள். இதனால்தான் நாங்கள் தெரிவிக்க தயாராகி வருகிறோம். எங்கள் கருத்தை கேட்டு கட்சியின் வளர்ச்சிக்காக சில மாற்றங்களை பழனிசாமி செய்தால் 2026 சட்டசபை தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். இவ்வாறு கூறினர்.இதற்கிடையே கூட்டத்தில் உட்கட்சி பூசல் ஏற்படாமல் இருக்க அதிருப்தியாளர்களை சமரசம் செய்யும் முயற்சியில் நிர்வாகிகள் சிலர் இறங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
நவ 23, 2024 18:30

இனி அ.தி.மு.க., எங்குமே களஆய்வுக் கூட்டமே போடாதீர்கள்.வேண்டவே வேண்டா.அது போர்க்களமாகி மாறிவிடுகிறது.இருக்கும் நாலுபேரும் வேறு கட்சிக்கு போய்விடுவார்கள்.வேண்டாம் வேண்டாம் ஆய்வுக்கூட்டமே வேண்டாம்


முக்கிய வீடியோ