வயலுக்குள் கட்டிய அங்கன்வாடி மையம்
மேலுார் : வடக்கு வலையபட்டியில் வயலுக்குள் கட்டி முடித்து திறக்கப்படாத அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சருகுவலையபட்டி ஊராட்சி வடக்கு வலையபட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே செயல்படும் அங்கன்வாடி மையத்தில் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இடப் பற்றாக்குறையால் ஐந்து மாதங்களுக்கு முன் ரூ. 12 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் மையம் கட்டப்பட்டது. வயலுக்குள் கட்டப்பட்டு, இதுவரை பயன்பாட்டிற்கு வராததால், மக்கள் பணம் வீணாவதாக கூறுகின்றனர்.பெற்றோர் சிலர் கூறியதாவது: ரோடு உயரத்தை விட பள்ளமான வயலுக்குள் மையம் கட்டப்பட்டுள்ளது. மையத்தைச் சுற்றி மழை நீர் தேங்கி நிற்கிறது. அதனால் சுவர்கள் வலுவிழந்து வருகிறது. ரோடு உயரத்திற்கு பள்ளத்தை சரி செய்ய வேண்டும். மையம் அருகே கழிப்பறை கட்டுவதற்கு பள்ளம் தோண்டியும், கட்டவில்லை. சிலநாட்களுக்கு முன் தேங்கிய நீரில் மூழ்கிய சிறுவனை சிலர் மீட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனவே, மாணவர்களுக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி, மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.பி.டி.ஒ., சுந்தரசாமி கூறுகையில், கிராமத்தினர் வாங்கி தந்த இடத்தில்தான் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சமீபத்திய மழையில்தான் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சரிசெய்ய, கட்டடத்தைச் சுற்றி மேடாக்கி, பேவர் பிளாக் கற்கள் பதிக்க நிதி கோரியுள்ளோம். வரும் ஆண்டில் நிதிஒதுக்கப்பட உள்ளது. அதன்பின் பணிகள் நடக்கும்'' என்றார்.