வில்வித்தை விளையாட்டு பயிற்சி: பள்ளி மாணவர்களுக்கு கிடைக்குமா
மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.,) கீழ் மாவட்ட விளையாட்டு மைதானங்களில் வில்வித்தை பயிற்சியாளர்களை நியமித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்.தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் (எஸ்.ஜி.எப்.ஐ.,) கீழ் தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கு வில் வித்தை விளையாட்டு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வில்வித்தை விளையாட்டு சேர்க்கப்படவில்லை. இதனால் மாவட்ட அளவில் இப்போட்டி நடத்தப்படாமல் நேரடியாக தேசிய போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக அணியில் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த விளையாட்டில் பயிற்சி பெற ஆண்டுக்கு ரூ.3 முதல் ரூ.5 லட்சம் செலவு செய்ய வேண்டும் என்பதால் ஓரளவு வசதி உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். ஆரம்பகட்ட பயிற்சிக்கு ரூ.25ஆயிரம் மதிப்புள்ள வில் வாங்க வேண்டியிருக்கும். நல்ல பயிற்சி பெற்று தேசிய போட்டியில் பங்கேற்க செல்லும் போது 'ஸ்பான்சர்கள்' கிடைப்பர். அப்போது விலையுயர்ந்த கருவிகளை வாங்கி விளையாடலாம். பழகும் போது 'ஸ்பான்சர்கள்' கிடைக்க மாட்டார்கள். இதனால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த விளையாட்டும் பயிற்சியும் இன்றுவரை எட்டாக்கனியாக உள்ளது. எஸ்.டி.ஏ.டி,யில் பயிற்சியை கொண்டு வந்தால் தான் ஏழை மாணவர்கள் பயன்பெற முடியும். தனியாக இடவசதி தேவையில்லை
உள்அரங்கில் விளையாட 18 மீட்டர் நீளம், 'அவுட்டோரில்' விளையாட 70 மீட்டர் நீளம் வரை தேவைப்படும். உள் அரங்காக பாட்மின்டன் அரங்கிலும் வெளி அரங்காக கால்பந்து மைதானத்திலும் இந்த விளையாட்டுக்கு பயிற்சி பெறலாம். அனைத்து மாவட்ட விளையாட்டு அலுவலகங்களிலும் பாட்மின்டன், கால்பந்து அரங்குகள் இருப்பதால் தனியாக இடவசதி தேவையில்லை. பாட்மின்டன் போட்டி விளையாடாத போது போஸ்டை கழற்றி விட்டு வில்லை வைக்கும் ஸ்டாண்ட், டார்க்கெட் போர்டு, ஸ்டாண்ட், வில், அம்புகளுடன் பாதுகாப்பு கவசங்கள் இருந்தால் போதும். முறையான பயிற்சி அளிக்கலாம். பயிற்சியாளர்கள் தேவை
ஆரம்ப கால விளையாட்டுக்கான கருவிகளை வாங்கி வைத்து திறமையான பயிற்சியாளர்களை நியமித்தால் போதும். வில்வித்தையில் போதிய பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களை தற்காலிக பயிற்சியாளர் அடிப்படையில் நியமிக்கலாம். பள்ளிக்கல்வித்துறையின் கீழ் விருப்பமுள்ள உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வு செய்து தேசிய விளையாட்டு மையத்தில் (சாய்) சிறப்பு பயிற்சி பெற வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக் மற்றும் உலகளவிலான வில் வித்தை போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழக அளவில் பள்ளிகளிலும் கல்லுாரிகளிலும் இந்த விளையாட்டு இல்லாததால் வெற்றி பெறுவதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பும் பறிபோகிறது. இதுபோன்ற சிறப்பு விளையாட்டுகளையும் பள்ளிக்கல்வித்துறையின் அரசு கொண்டு வந்து எஸ்.டி.ஏ.டி.,யின் கீழ் பயிற்சி அளிக்கவேண்டும்.